Enable Javscript for better performance
நீட்: பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வில் புதுவை அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.
    புதுவையில் நிகழ் கல்வியாண்டில் 4, 573 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, இவர்களில் 4,462 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 1,768 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    இந்த நிலையில், சென்டாக் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுவையைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் ரமணன் 552 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
    மாநிலத்திலேயே 500 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 400 மதிப்பெண்ளுக்கு மேல் 32 மாணவர்களும் பெற்றுள்ளனர். 150 மாணவர்கள் 200 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். புதுவையை பொருத்த வரை நீட் தேர்வில் 250 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும்.
    அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளியிலும், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஜீவானந்தம் பள்ளியில் 101 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களில் 21 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 12 மாணவர்கள் தனியார் பள்ளியிலும், 9 மாணவர்கள் அரசுப் பள்ளியிலும் பயின்றவர்கள்.
    அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிகபட்சமாக 138 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றுள்ளார். இதேபோல, திருவள்ளுவர் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் நீட் தேர்வு பயிற்சி பெற்றனர். இவர்களில் 18 மாணவிகள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளி மாணவிகள் ஆவர்.
    ஆனால், யாருமே 150 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை. இதனால், சென்டாக் மூலம் மருத்துவம் படிக்கத் தேர்வாகும் மாணவர்களில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும்.
    கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறைவாகவே வழங்கப்பட உள்ளது. ஏனெனில், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களை 100 ஆக இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்துவிட்டது. இதனால், நிகழாண்டு 150-க்கும் குறைவான மருத்துவ இடங்களே
    அரசுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai