Enable Javscript for better performance
மத்திய அரசுடனான மோதல் போக்கால் புதுவை வளர்ச்சி பாதிப்பு: பாஜக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசுடனான மோதல் போக்கால் புதுவை வளர்ச்சி பாதிப்பு: பாஜக குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 17th June 2018 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசுடன் முதல்வர் நாராயணசாமி மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதால், புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாக புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் குற்றஞ்சாட்டினார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, புதுவைக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்துக்கு ஒரு தீர்ப்பா? என்று கேட்டுள்ளார்.
    3 நியமன எம்.எல்.ஏ.க்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்ட விதிகளுக்கு உள்பட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
    மேலும், எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பையே வழங்கி உள்ளனர். அத்தகைய தீர்ப்பை மதிக்காத முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் ஆகியோர் ஜனநாயகம், நீதி, நேர்மை பற்றி பேசத் தகுதியற்றவர்கள்.
    கட்செவி அஞ்சல் மூலம் துணைநிலை ஆளுநருக்கு பொதுமக்கள் புகார் அளித்தால், அமைச்சர்கள் சொல்லாமல் புகாரை எடுக்கக் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இவ்வாறு அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஏ.டி.எம். பண மோசடி போன்றவைகளாக இருக்கும்போது, மக்கள் யாரிடம் போய் புகார் அளிப்பார்கள்?
    தொடர்ந்து, மத்திய அரசுடனான மோதல் போக்கால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முடங்கியுள்ளது. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோதும், எம்.பி.யாக இருந்தபோதும், தற்போது முதல்வராக இருக்கும் நிலையிலும் மாநில வளர்ச்சிக்கு தடையாகவே இருந்து வருகிறார்.
    மக்களின் உணர்வுகள், துன்பங்களை அறியாத அவரது செயல் புதுவை மாநிலத்துக்கு விரோதமானது என அந்த
    அறிக்கையில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai