Enable Javscript for better performance
ரமலான் கொண்டாட்டம்: புதுச்சேரியில் சிறப்புத் தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
    உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுவையில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் வரக்கூடிய நோன்பு நிகழ்ச்சி. இதையொட்டி, கடந்த 30 நாள்களாக விரதமிருந்து வந்த இஸ்லாமியர்கள் பிறை தெரிந்ததும் நோன்பை முடித்து, ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் சனிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர்.
    புதுச்சேரி முல்லா வீதி குத்பா பள்ளிவாசல், லாசுப்பேட்டை விமான நிலைய சாலையில் உள்ள நூரே ஹிதாயதுல் இஸ்லாமியா பள்ளிவாசல், முதலியார்பேட்டை நூறடி சாலை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி வாசல், மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, ஜேஜே நகர், தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, ஒதியம்பட்டு, இந்திரா நகர், அரியாங்குப்பம், தவளக்குப்பம், ரெட்டியார்பாளையம், கோவிந்தசாலை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றன.
    தொழுகையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை திரளான இஸ்லாமியர்கள் கலந்து கெகாண்டு ரமலான் தொழுகை செய்தனர். முல்லா வீதி முகம்மதியா பள்ளி வாசலில் நடந்த தொழுகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் பங்கேற்றார். மேலும், புதிய பேருந்து நிலையம் மஸ்ஜிதே முகம்மதியா, அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், நெல்லித்தோப்பு, வானரப்பேட்டை, புதுசாரம் பாலாஜி நகர், நைனார்மண்டபம், சின்னசுப்புராயப்பிள்ளை வீதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றன.
    இதேபோல, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி சிலை எதிரே நடைபெற்ற ரமலான் தொழுகையில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அதை முடித்துவிட்டு, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், நல உதவிகளை வழங்கியதுடன், உறவினர்கள், நண்பர்களுக்கு ரமலான் விருந்து வழங்கி மகிழ்ந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai