Enable Javscript for better performance
புதுவைக்கு அதிகாரம் மிக்க மாநில அந்தஸ்து தேவை: நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவைக்கு அதிகாரம் மிக்க மாநில அந்தஸ்து தேவை: நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகாரமிக்க மாநில அந்தஸ்தை புதுவைக்கு வழங்க வேண்டும் என்று புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
     நீதி ஆயோக்கின் 4-ஆவது கூட்டம் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் பங்கேற்ற புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: சிறப்பான நிர்வாக பயிற்சிக்கும், புதிய ஆலோசனைகளுக்கும் அடித்தளமிடுவதாக நீதி ஆயோக் கூட்டம் அமைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளில் மேம்பாட்டுப் பணிகளை முடுக்கிவிடுவதாக இருக்கிறது.
     வேளாண் துறையில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிப்பது நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். ஏனெனில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் மிகுந்த துன்பத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
     எனவே, விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் கஷ்டங்களைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்குச் சரியான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
     புதுச்சேரியில் இ-நாம் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருங்கிணைந்த பெரிய மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தின் கீழ் இன்னும் இரண்டு மார்க்கெட்டுகளை 2018-2019 ஆம் ஆண்டுக்குள் கொண்டு வரவுள்ளோம். அதேபோல, உள்ளூர் விவசாய விளை பொருள்கள் கமிட்டியும் செயல்பாட்டில் உள்ளது. புதுவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
     புதுச்சேரிக்கு சிறப்பு அதிகாரமிக்க மாநில அந்தஸ்து வழங்குவதுடன், மத்திய நிதிக் குழுவில் இணைத்து மற்ற மாநிலங்களைப் போல நிதி கிடைக்க வழிகாண வேண்டும். மத்திய அரசின் மானியத்தை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் உயர்த்தி வழங்கினால்தான் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும்.
     மத்திய அரசின் திட்டங்களுக்கு மற்ற யூனியன் பிரதேசங்களில் 90 சதவீத நிதியை மத்திய அரசே வழங்குகிறது. 10 சதவீதம் மாநில அரசின் நிதியாக இருக்கிறது. இதேபோல, புதுவைக்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். புதுவை அரசின் ஆரம்ப கால கடன் தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தல்,
     7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான நிலுவைத் தொகையை வழங்குதல் ஆகிய நீண்ட கால கோரிக்கைகள் உள்ளன.
     வெளிச் சந்தையில் புதுவை அரசு கடன் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறப்புச் சலுகைகள், ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தை விற்று பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை, வங்கிக் கடனை அடைப்பதற்கு அனுமதி தர வேண்டும்.
     இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அசோகா ஹோட்டல் பங்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாட்டுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகளை நீதி ஆயோக் உடனடியாகத் தீர்த்து வைக்கும் என நம்புகிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
     இந்தக் கூட்டத்தில் நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் விவேக் ஜேபிராஜ், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அனைத்து மாநில முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai