Enable Javscript for better performance
வேளாண் துறையில் கட்டண நீர் கொள்கை: கிரண் பேடி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் துறையில் கட்டண நீர் கொள்கை: கிரண் பேடி வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் துறையில் கட்டண நீர் கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
     கடந்த சில வாரங்களாக ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
     கடந்த 8-ஆம் தேதி காட்டுக்குப்பத்தில் உரிமம் இன்றி ஆழ்துளை கிணறு மூலம் நீரை எடுத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்த கிணறுக்கு சீல் வைத்து, அதை மூடச் செய்தார். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை குருமாம்பேட்டில் உள்ள மதுபானத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
     இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
     ஆய்வுக்குப் பின்னர் கிரண் பேடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் கூறியதாவது:
     புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் இணையதளம் மூலம் தண்ணீர் மீட்டர்களை வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு உள்ள இடங்களுக்குச் சென்று பதிவு செய்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீரைத் தேவையின்றி அதிக அளவில் பயன்படுத்துவதைத் தடுக்க வேளாண் துறை கட்டண நீர் கொள்கை உருவாக்க வேண்டும்.
     தேசிய தொலை உணர்வு மையம், மத்திய நிலத்தடி நீர் ஆணைய நிபுணர்களை அழைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியைப் பெற்று மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரை உகந்த முறையில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
     புதுச்சேரியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல்களைச் சேகரித்து தொகுக்க வேண்டும். நீர் சேமிப்பு குறித்து செல்லிடப்பேசி எச்சரிக்கையை உருவாக்க வேண்டும்.
     அதிக அளவில் நீரைச் சேமிப்பவர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைநீரைச் சேமிக்க புதுச்சேரி, காரைக்காலில் செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
     ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்புப் பொறியாளர் சத்யமூர்த்தி, நிர்வாகப் பொறியாளர் கண்ணியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai