Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? புதுவையில் தொடரும் குழப்பம்- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? புதுவையில் தொடரும் குழப்பம்

    By  புதுச்சேரி,  |   Published on : 19th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pondy2

    புதுவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது என்பது தொடர்ந்து குழப்பமான நிலையில் இருந்து வருகிறது.
     புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
     இதற்கிடையே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி கோரி கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டப்பேரவை ஜூன் 4-ஆம் தேதி கூடியது.
     ஆனால், மத்திய அரசு பல்வேறு விளக்கம் கேட்டு நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர மறுத்ததால், ஜூன் 5-ஆம் தேதி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
     இதையடுத்து நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற ஜூன் 6-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி தில்லி சென்றார். அப்போது மத்திய உள்துறைச் செயலர், இணைச் செயலரை சந்தித்து மத்திய அரசு கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்து, நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர கேட்டுக்கொண்டார்.
     ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
     இதையடுத்து, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் நாராயணசாமி , மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தரும்படி கேட்டார். ஞாயிற்றுக்கிழமை நீதி ஆயோக் கூட்டம் இருந்ததால் அனுமதி தரப்படவில்லை.
     இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்தித்து நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தரும்படி வலியுறுத்தினார்.
     அப்போது நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர மத்திய நிதி அமைச்சர் உறுதியளித்ததாக தெரிகிறது. இதனால் விரைவில் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி கிடைக்கும் என்று அரசு தரப்பில் நம்பிக்கையாக உள்ளனர்.
     அதேநேரத்தில், மாநிலத்தின் நிதிநிலை தொடர்பான விளக்கக் கூட்டத்தை புதன்கிழமை நடத்த முதல்வர் நாராயணசாமி ஏற்பாடு செய்துள்ளார்.
     தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலர், அரசுச் செயலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
     கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களை முதல்வர் விளக்கவுள்ளார். முதல்வரின் தன்னிலை விளக்கம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
     இதற்கிடையே, பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இம்மாத இறுதியில் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
     இதனால் மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி கொடுத்தவுடன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிறைவேற்றி, 2 நாள் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பேரவை மீண்டும் ஒத்தி வைக்கப்படும்.
     மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது எப்போது என்ற குழப்பமான நிலை இருந்து வருகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai