Enable Javscript for better performance
நிதிநிலை தொடர்பாக  முதல்வர் கூட்டம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணிக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை தொடர்பாக  முதல்வர் கூட்டம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணிக்க முடிவு

    By DIN  |   Published on : 20th June 2018 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை நிதிநிலை அறிக்கை தொடர்பாக முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை என்.ஆர். காங்கிரஸ்,  அதிமுக புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
    புதுவையில் கடந்த 7 ஆண்டுகளாக  இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு முழுநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஏப்ரலில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.  
    முழு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நிதிநிலை தொடர்பான விளக்கக் கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. 
    இதற்கான அறிவிப்பை அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
    அதில், நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற முதல்வர் நாராயணசாமி தவறிவிட்டார்.   இதற்காக மக்களை குழப்ப புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அதில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.   இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை,  குழப்பும் ஒரு செயல்.  மேலும் மக்களை ஏமாளியாக்கும் ஒரு நிலைப்பாடு. புதுவை மக்கள் மீது அக்கறை இருந்தால் மாநில திட்டக்குழுக் கூட்டத்தை கூட்டும்போதே எம்.எல்.ஏ.க்களை அழைத்து கருத்துகளை அறிந்திருக்க வேண்டும்.  குறைந்தபட்ச  எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சிகளின் பேரவை குழுத் தலைவர்களையாவது அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.  முதல்வர் தனது இயலாமையை மூடி மறைக்க கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் எனத் தெரிவித்துள்ளார் ஆ.அன்பழகன். 
    இந்த நிலையில், எதிர்க் கட்சியான என்.ஆர்.காங்கிரஸும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. 
    இதுதொடர்பாக எதிர்க் கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில், புதுவை சட்டப்பேரவையில் வெகுவிரைவில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.   இந்த நிலையில் நிதி நிலை தொடர்பான விளக்கத்துக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  இது ஆட்சியாளர்களின்  இயலாமையை   மறைப்பதற்காகவும்,  புதுவை மக்களின் கவனத்தை முற்றிலும் திசை திருப்பும் செயல்.  நிதி நிலை தொடர்பான விளக்கக் கூட்டம் என்பது வேறெங்கும் நடக்காத அரசியல் நிகழ்வாக கருதுகிறேன்.  அதனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai