Enable Javscript for better performance
"புதுவை நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்'- Dinamani

சுடச்சுட

    

    புதுவை நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விரைவில் நடைபெறும் என்றும் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி: 
    புதுவை அரசின் 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ரூ.7,530 கோடியில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்காக 40 நாள்களுக்கு முன்பு அனுப்பிவைக்கப்பட்டது. 
     அதில் மத்திய,  மாநில அரசுகள் இணைந்து 27 துறைகள் மூலம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.389 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும் என தோராயமாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
    இந்த நிதிநிலை அறிக்கை மத்திய உள்துறை மூலம் நிதி அமைச்சகத்துக்கு சென்றபோது அவர்கள் கேட்ட விளக்கங்களை புதுவை அரசு தெளிவுப்படுத்தியது. 
    மீண்டும் அந்தக் கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு வந்தபோது மத்திய அரசின் நிதியான ரூ.389 கோடிக்கு அந்தந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என விளக்கம் கேட்கப்பட்டது.
    இதையடுத்து நானே புதுதில்லி சென்று கடந்த ஆண்டு எந்த வகையில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் கோப்பு அனுப்பப்பட்டதோ, அதேபோலத்தான் இந்த ஆண்டும் அனுப்பப்பட்டது.  
    மத்திய உள்துறை இணைச் செயலரை சந்தித்து விளக்கம் அளித்த பிறகும் ஒரு வார காலத்துக்கும் மேலாக இதற்கு அனுமதி தரப்படவில்லை.  இந்த நிலையில்,  கடந்த சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்தேன்.  அதன் அடிப்படையில் புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதலை மத்திய  அரசு செவ்வாய்க்கிழமை வழங்கியது.
    எனவே, விரைவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்.  இதற்கான தேதியை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் முடிவு செய்து அறிவிப்பார். கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்  என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai