Enable Javscript for better performance
4 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்:  புதுவை முதல்வர் நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

  

  4 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்:  புதுவை முதல்வர் நம்பிக்கை

  By DIN  |   Published on : 20th June 2018 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிர்வரும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறுவது உறுதி என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
  புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
  மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு, சரக்கு, சேவை வரி ஆகியவற்றால் வேலைவாய்ப்பின்மை, பணப்புழக்கம் இல்லாமல் போனது. மத ரீதியாக பிரித்தாளும் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.  இது நிதர்சன உண்மை.
  44 வயதில் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியேற்றார். 48-ஆவது வயதில் ராகுல் பிரதமராக பதவியேற்பார். இது காலத்தின் கட்டாயம்.
  ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் அக்டோபர், நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.
  தென் மாநிலங்கள் மட்டுமன்றி,  மேற்கு மாநிலங்களிலும் பாஜக வலுவிழந்துள்ளது.
  2019-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக இருக்கும் இடத்தை தேடும் நிலை ஏற்படும்.
  கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை. உற்பத்திச் செலவுக்கான விலை கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
  மேற்கு வங்கம், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
  புதிய தொழில்சாலைகள் கொண்டு வரப்படவில்லை. வெளிநாட்டு மூலதனம் வரவில்லை. மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாஜகவை எப்படியாவது வெற்றி பெற வைக்கும் வேலையைத்தான் செய்கின்றனர்.
  ஜனநாயகம் தழைக்கவும், தனி மனித சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும், ஒற்றுமை ஏற்படவும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.
  2019-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு பிரகாசமான காலம். அது மத்தியில் மட்டுமல்ல, புதுவைக்கும்தான். 
  அப்போது புதுவைக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் காணாமல் போவார்கள்.
  புதுவையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், இடையூறு ஏற்படுகிறது. இந்த முட்டுக்கட்டைக்கு காரணமானவர்கள் குறித்து தில்லியில் அண்மையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன். 
  எனது பேச்சுக்கு ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்றார் முதல்வர் நாராயணசாமி.
  கூட்டத்தில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai