Enable Javscript for better performance
புதுவை காவல் துறை குறித்த ஆவணப் படம் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி:   புதுவை காவல்துறை குறித்த ஆவணப் படம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
    புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆவணப் பட வெளியீட்டு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,  முதல்வர் வே.நாராயணசாமி,  அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  இரா.கமலக்கண்ணன்,  காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம்,  ஐஜி சுரேந்தர் சிங் யாதவ்,  முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா,  செயலர் சரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட  காவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 
    30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப் படத்தில் புதுவையில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளான ரோந்துப் பணி,  நவீன யுக்திகள்,  காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள்,  சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
    மேலும், காவல்துறையினரின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொழில்பயிற்சி குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: 
    காவல்துறையின் செயல்பாடுகள் மக்களுக்குச் சென்றடைய இது சிறந்த வழியாக இருக்கும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அமைதியையும் தூய்மையையுமே விரும்புகின்றனர். காவல்துறைக்கு வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.  
    புதுச்சேரி அமைதியும், தூய்மையும் உள்ள இடமாக திகழ்கிறது. காவல் துறையும் சிறந்து விளங்குகிறது. இந்த ஆவணப் படம் உருவாக காரணமாக இருந்த புதுவை காவல்துறை இயக்குநர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்.  
    ஆவணப் படம் மக்களைச் சென்றடைய ஆளுநர் மாளிகை இணையதளம்,  புதுவை  காவல்துறை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கிரண் பேடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai