Enable Javscript for better performance
ஜூலை முதல் வாரத்தில் புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கல் ?- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை முதல் வாரத்தில் புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கல் ?

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pondy2

    புதுவை சட்டப்பேரவையில் ஜூலை முதல் வாரத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
     புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
     இதற்கிடையே, மாநில ஆளுநர் கிரண் பேடி தலைமையில் ஏப்ரலில் கூடிய மாநில திட்டக்குழுக் கூட்டத்தில் ரூ.7,830 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு அனுப்பப்பட்டது.
     இந்த நிலையில், ஜூன் 4-ஆம் தேதி சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜூன் 4, 5-ஆம் தேதிகளில் விவாதம் நடைபெற்ற நிலையில், பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தராததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
     இந்த நிலையில், புதுவை அரசு நிதிநிலை அறிக்கையை அனுப்பிய 60 நாள்களுக்குப் பிறகு, நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. பொதுவாக மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், ஜூன் மாதத்தில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், இந்த ஆண்டும் ஜூன் மாதத்துக்குள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்ற நோக்கில், ஜூன் மாத கடைசியில் வெளிநாடு சுற்றுலா செல்ல பேரவைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், மத்திய அரசிடம் இருந்து நிதிநிலை அறிக்கைக்கு காலதாமதமாக அனுமதி கிடைத்துள்ளதால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் காலமும் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.
     பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, ஜூலை மாதம் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai