Enable Javscript for better performance
தமிழ் தெரிந்தவரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் தெரிந்தவரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கக் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் தெரிந்த அதிகாரியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் என்று புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலர் இரா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     புதுச்சேரியில் உள்ளூர் மக்கள் அதிகளவு தொடர்பு கொள்ளக்கூடிய மாவட்ட ஆட்சியர், காவல்துறைத் தலைவர், முதுநிலை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளை தமிழ் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
     குறிப்பாக, அடித்தட்டு மக்கள் தங்களது பாதிப்புகளை நேரிடையாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சத்யேந்திர சிங் துர்சாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளில் ஒருவரை அரசு தேர்வு செய்து வருகிறது.
     புதிதாக நியமிக்கப்படும் நபர் தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால், காலாப்பட்டில் தனியார் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியாததால்தான் கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டது. அதுவே, தமிழ் தெரிந்த அதிகாரியாக இருந்தால் அவரே எதற்கு இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
     அந்த நிறுவனம் விரிவாக்கம் செய்யாமல் இருப்பதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்கியிருப்பார். அதன்படி, அந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு தனியார் நிறுவனமே தேவையில்லை என்ற கருத்தை மக்களும் அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பதிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பார்கள்.
     எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்ய முடியாமல் போனதற்கு தமிழ் தெரிந்த மாவட்ட ஆட்சியர் இல்லாததுதான் காரணம்.
     எனவே, தமிழ் தெரிந்த ஒருவரை மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் அல்லது தமிழிலும் சகஜமாக பேசுவதுடன், தமிழில் மக்கள் எழுதித் தரும் மனுக்களை படித்து தீர்வு காணும் வகையில் 3 மாத காலத்துக்குள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் உத்தரவையாவது பிறப்பிக்க வேண்டும். அதுபோல, பிரச்னைகளுக்காக மக்கள் சந்திக்கும் அதிகாரிகள் இடங்களில் தமிழ் தெரிந்தவர்களையே நியமிக்க வேண்டும் அல்லது அவர்களும் 3 மாதத்தில் தமிழில், எழுதிப்படிக்க கற்றுக்கொள்ளும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முருகானந்தம்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai