Enable Javscript for better performance
மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டியது அவசியம்: முதல்வரின் நாடாளுமன்றச் செயலர்- Dinamani

சுடச்சுட

    

    மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டியது அவசியம்: முதல்வரின் நாடாளுமன்றச் செயலர்

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை மீண்டும் பரப்ப வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு, நினைவுச்சுடர் பயண தொடக்க விழா புதுச்சேரி மகாகவி பாரதி நினைவு இல்லத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை தொடக்கிவைத்து முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:
     மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாடு தற்போது உள்ள நிலையில் கருத்து சுதந்திரம், பேச்சுரிமை எந்த அளவில் கேள்விக் குறியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும் இந்த மாநாடு உதவும்.
     குறிப்பாக, புதுவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற மாநிலம். இந்த மண்ணில் இருந்துகொண்டு தான் பாரதியார், பாரதிதாசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை, சங்கரதாஸ் ஆகியோர் சிறந்த கருத்துகள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் விதைத்தனர்.
     தற்போது, மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை மீண்டும் பரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவி மயமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இதில் இந்தியாவின் அடையாளமே பன்முகத்தன்மைதான் என்பதை அடையாளம் காட்ட இந்த மாநாடு உதவும்.
     ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு புரட்சியை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
     இந்தியாவின் ஜனநாயகத்தை மட்டுமல்ல, மக்களை காப்பாற்றும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் வைக்கப்படும் கருத்துகள் இந்தியாவில் பாசிச ஆட்சி நடத்துபவர்களுக்கு ஒரு சவாலாகவும், திருப்பு முனையாகவும் இருக்கும் என்றார் லட்சுமிநாராயணன். முன்னதாக, மாநாட்டில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுச் சுடரை மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி வெளியிட, தவில் விநாயகம் பெற்றுக்கொண்டார்.
     கவிஞர் தமிழ் ஒளி நினைவுச் சுடரை ராமன் வெளியிட பாகூர் கல்கி பெற்றுக்கொண்டார். பாவேந்தர் பாரதிதாசன் நினைவுச்சுடர் மலரை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட, மேகலாதேவி பெற்றுக்கொண்டார்.
     இதேபோல, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுச் சுடரை முருகன் வெளியிட, ஆனந்த் பெற்றுக்கொண்டார். மகாகவி பாரதி நினைவுச் சுடரை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, அன்பரசி ஜூலியட் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai