Enable Javscript for better performance
உடல், ஆன்மாவை இணைக்க யோகா உதவும்: மத்திய அமைச்சர்- Dinamani

சுடச்சுட

  

  உடலையும்,  ஆன்மாவையும் இணைக்க யோகா உதவும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார். 
  புதுச்சேரி ஜிப்மரில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக யோகா தினத்தை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது: 
  யோகா என்பது ஆசனங்களையும், பிராணயாமாவையும் மட்டும் செய்வதல்ல. யோகா பயிற்சியின் ஊடே தெய்வீக நினைவுடன் உடலையும் ஆன்மாவையும் இணைத்துக்கொள்ள யோகா உதவும்.   இதுவே "கர்ம யோகம்"என்று அழைக்கப்படுகிறது. யோகாவானது கடவுளிடம் சரணடைவதற்காக செய்யப்படும் ஆன்மிகப் பணியின் தரத்தை மேம்படுத்துகிறது என்றார்.
  விழாவில், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பேசும்போது, யோகா பயிற்சியானது வாழ்கையில் மனஅழுத்தத்தைக் குறைப்பதோடு வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது  என்றார். மேலும்  "ஹத யோகா' வை உள்ளங்கை பயிற்சி மற்றும் அக்குபிரசர் நுட்பம் மூலம் செயல் விளக்கம் அளித்தார். 
  விழாவில், ஜிப்மரின் இயக்குநர் எஸ். விவேகானந்தம்,  டாக்டர் ஆர்.பி. சுவாமிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே, ஜிப்மர் காரைக்காலின் தலைவர் (கல்வி) டாக்டர் ஜி.கே. பால், மருத்துவர்கள்  பாவனா படே,  தாசரி பாப்பா,  பி.வி. சாய்சந்திரன்,  பிரதீப் நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  விழாவில் யோகா பற்றிய விளக்கக் கையேடு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. இந்த யோகா கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   உடலியல் துறை பேராசிரியர் பிரவதிபால் நன்றி தெரிவித்தார்.

  புதுவை பல்கலைக்கழகத்தில்...
  புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
  பல்கலை.யின் உடல்கல்வி துறை சார்பில்  4-ஆவது  யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, 50 வகையிலான யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.   பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜவாஹர்லால் நேரு கலையரங்கில் மாணவர்களும், ஊழியர்களும் பங்கேற்ற இந்த விழாவில், கலைப் புல முதன்மையர் நளினி ஜே தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, யோகா செயல் விளக்க பயிற்சியைத் தொடக்கி வைத்தார். 
  அப்போது பேசிய அவர்,  இந்தியாவின் தெய்வீகக் கலையாக யோகா விளங்கி வருகிறது.  வாழ்க்கையில் தெய்வீக நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்துப் பயிற்சி முறைகளும் யோகாவில் இருப்பதால், மக்கள் அனைவரும் யோகாவை கற்று, மிகச் சிறந்த நிலையை அடைய வேண்டும்.  குறிப்பாக, ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுகிற மாணவர்கள் யோகக் கலையில் ஈடுபட்டால் அவர்களால் தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அதனால், திறன்களை மேம்படுத்திக் கொண்டு, ஆற்றலை, ஒருமுகப்படுத்தி வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் என்றார்.
  விழாவில் பதிவாளர் பேராசிரியர் தரணக்கரசு,  நிதி அதிகாரி பிரகாஷ்,  உடற்கல்வித் துறைப் பேராசிரியர் சுல்தானா,  பேராசிரியர்கள்,  மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   யோகா தின கட்டுரை,  யோகா செயல்விளக்கம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

  நேரு யுவகேந்திராவில்...
  மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும்  நேரு யுவகேந்திராவில் சர்வதேச யோகா தினம் மற்றும் இளையோர் பாராளுமன்றம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
  புதுச்சேரி சோலை நகர் இளைஞர் விடுதியில் நடைபெற்ற இந்த  நிகழ்ச்சியில்,  கணக்காளர் புஷ்பா வரவேற்றார்.  மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன் ராணி நோக்கவுரையாற்றினார்.  புதுவை மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி முகாமை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 
  யோகா பயிற்சியை பேராசிரியர் திருநாவுக்கரசு செய்து காண்பித்தார். புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர்  க.லட்சுமிநாராயணன்,  பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு  சான்றிதழ் வழங்கினார்.  புதுவை மாநில என்.எஸ்.எஸ்.  அலுவலர் குழந்தை சாமி மற்றும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  இளநிலை நற்பணி மன்ற செயலாளர்  தமிழ்ச் செல்வி நன்றி தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai