Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டது ஏன்? பாஜக விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

  

  நிதிநிலை அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டது ஏன்? பாஜக விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை

  By DIN  |   Published on : 23rd June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது ஏன் என்பது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
  புதுவை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மீது பல புகார்களை தெரிவித்து புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் இரு தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.   
  இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில்,  புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும்,  பொதுப்
  பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: 
  புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன்,  காங்கிரஸ் குறித்தும்,  புதுவை அரசு குறித்தும் ஆதாரம் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்திருக்கிறார்.  இது அசியலின் முதிர்ச்சி 
  இன்மையை வெளிப்படுத்தி உள்ளது. பதவி சுகத்துக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் நாங்கள்தான் ஆட்சி செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் பாஜக கணக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தற்போது இல்லை என்பதனை பாஜக நினைவில் கொள்ளவேண்டும்.
  ஆளுநர்களை வைத்துக்கொண்டு அதிகாரப் பசியை போக்கிக்கொண்டிருக்கும் 
  பாஜகவின் ஜனநாயக விரோதச் செயலை மக்கள் உற்று நோக்குகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. 
  60 நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் அனுமதிக்காக புதுவை மாநில நிதிநிலை அறிக்கை தொடர்பான கோப்புகள் அனுப்பியும், அதற்கு அனுமதி அளிக்காமல் மத்திய பாஜக அரசு காலம் தாழ்த்தி முட்டுக்கட்டை போட்டதன் காரணத்தை சாமிநாதன் மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
  மத்திய மக்கள் விரோத பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் சீர்குலைத்து கொண்டிருப்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது.  விஷம் போல் ஏறி வரும் விலைவாசியை குறைக்க முடியவில்லை.  நாளுக்கு நாள் ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கமுடியவில்லை. 
  விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளவில்லை.  
  அனைத்துத் தரப்பு தொழிலாளர்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டங்கள் ஏதுமில்லை. ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
  புதுவை வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத அதிகார மையமும்,  புதுவை பாஜகவும் வாய்ச்சவடால் விடுவதையே அன்றாடப் பணியாக செய்துவருகின்றன. 
  மத்திய அரசிடம் நிதி கேட்டு பெறமுடியாத பாஜக,  முதல்வர் நாராயணசாமி  தலைமையில் செயல்படும் காங்கிரஸ் அரசை பற்றி குறை சொல்வதற்கு பொய்க் காரணங்களை தேடி அலையும் போக்கை கைவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நமச்சிவாயம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai