Enable Javscript for better performance
புதுவை பேரவையில் ஜூலை 2-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப் பேரவையில் வருகிற ஜூலை 2-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
    புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த  7  ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையும், ஜூன், ஜூலை மாதங்களில் முழு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
    நிகழ் ஆண்டு 4 மாத காலத்துக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், மாநில திட்டக் குழு கூடி, முழு நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பியது.
    மத்திய அரசு அனுமதி கொடுத்துவிடும் என்ற நோக்கில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி கூடியது. ஆனால், மத்திய அரசு பல்வேறு விளக்கம் கேட்டு நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர மறுத்ததால், ஜூன் 5-ஆம் தேதியன்றே சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டு, கூட்டத் தொடர் முடிக்கப்பட்டது.
    இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர், செயலர்களைச் சந்தித்து புதுவை நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தினார். இதன் காரணமாக, கடந்த 19-ஆம் தேதி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
    மத்திய அரசின் ஒப்புதல் பெற்று ஜூன் பாதிக்குள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், பேரவைத் தலைவர், அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் ஆகியோர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டு  ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, அவர்கள் சனிக்கிழமை வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அடுத்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
    அதன்படி, ஜூலை 2-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
    இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
    புதுச்சேரி சட்டப்பேரவை ஜூலை 2- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டப்படுகிறது. அப்போது, 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
    இதன்மூலம், நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்வர் வே.நாராயணசாமி ஜூலை 2-இல் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai