Enable Javscript for better performance
மழை நீரை சேமிக்க ஆளுநர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் சேமிப்பு என்பது ஒரு வழிபாடு; ஆகவே, மழைநீரை சேமிக்க அனைத்துத் தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து அவர் தனது கட்செவி அஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
    புதுவை  மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.  யாராக இருந்தாலும்,  எங்கு இருந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் நாங்கள் இல்லாவிட்டாலும்,  அரசுப் பணியில் முன்னணியில் இருப்பவர்கள் பருவமழைக்காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்க உறுதிப்பாடு எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.  தமிழ்நாட்டைப்போல புதுவையும் நிலத்தடி நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகமும்,  புதுவையும் நிலத்தடி நீரை பகிர்ந்து கொள்கிறது.  அழகான புதுவை காப்பாற்றப்பட வேண்டும் என்றாலும்,  தமிழகத்துக்கு நீர் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்றாலும் மழைநீரை சேமிக்க பொறுப்பேற்க வேண்டும்.  இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளோ,  பதவிகளோ,  இடமோ முக்கியமில்லை. 
    நாம் எங்கு வாழ்ந்தாலும்,  வேலை செய்தாலும்,  சொந்த வீடு வைத்திருந்தாலும்,  நண்பர்கள் வைத்திருந்தாலும், உறவினர்களைக் கொண்டு இருந்தாலும் நம்மால் எவ்வளவு அதிகம் மழைநீரை சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமிக்க வேண்டும்.  
    தற்போது பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. 
    அனைத்துத் தொழிற்சாலைகள்,  அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்கள்,  பண்ணை நிலங்கள்,  பொது பூங்காக்கள்,  நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகளும் மழைநீரை சேமிக்க யாரும் முன்முயற்சி எடுப்பார்கள் என காத்திருக்கக் கூடாது.   நிலத்தடி நீர் ஆணையம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுடன் சேர்ந்து மழைநீர் சேகரிப்பதற்கான செயல்திறமிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
    மாற்றத்தை வழிநடத்துங்கள்.  நீங்கள் மற்றவர்களிடம் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்.  அதற்காக காத்திருக்க வேண்டாம்.  எங்களது அண்மைக்கால ஆய்வுகள் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.  பெரிய அளவில் தண்ணீரை பயன்படுத்துபவர்களாக இருந்தாலும்கூட மழை நீரை சேமிப்பதில் கவனக்குறைவாகவே உள்ளனர். 
    புதுவையை நாம் விரும்பினால்,  இந்த பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்க வேண்டும்.  
    அந்த நீரானது பயிர் செய்யவும், உற்பத்தி செய்யவும் பயன்பட்டு புதுச்சேரியை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும். இதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.  பிறருக்காக காத்திருக்காமல் அதை ஒவ்வொருவரும் தொடங்க வேண்டும். 
    தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டபோது, நீர் சேமிப்பு கிணறுகள் போதிய அளவில் அமைக்கப்படாமல் இருப்பது அல்லது குறைபாடுகளுடன் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், கட்டடத்தின் மேற்கூரைகளில் இருந்து நீரை எடுத்து வரும் குழாய்கள் உடைக்கப்பட்டு இருந்தது அல்லது அந்த குழாய்களில் பெரிய அளவு கசிவு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. 
    தயவு செய்து இதற்கு பொறுப்பு எடுத்து செயல்பட வேண்டும்.  தண்ணீர் சேமிப்பு என்பது ஒரு வழிபாடு மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதும் ஆகும்.  இது மிகவும் நல்ல புண்ணியமாகும்.  தண்ணீரை சேமிப்பது நல்ல புண்ணியமாக  அறியப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai