Enable Javscript for better performance
மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்த புதுவை போலீஸார் மீது கேரளத்தில் தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்த புதுவை போலீஸார் மீது கேரளத்தில் தாக்குதல்

    By DIN  |   Published on : 23rd June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை கேரளத்தில் கைது செய்த புதுவை போலீஸார் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி அண்ணாநகரை சேர்ந்தவர் வினித்ஜெலன் (30).  இவர், மேட்டுப்பாளையத்தில் பொட்டலமிடும்  பிளாஸ்டிக் காகித உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தைச் சேர்ந்த பினு, அவரது சகோதரர்கள் பிஜூ,  சஜூ ஆகியோர் சந்தித்து கேரளத்தில் மொத்தமாக பொட்டலமிடும் பிளாஸ்டிக் காகிதம் விற்பனை செய்வதாகக் கூறினர்.
    இதையடுத்து, வினித் ஜெலன் பலமுறை அவர்களுக்கு பிளாஸ்டிக் காகிதங்களை விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தையும் அவர்கள் கொடுத்தனர்.   இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு ரூ.38 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் காகிதத்தை வினித்ஜெலன் அனுப்பிவைத்தாராம்.  ஆனால்,  அதற்கான பணத்தை பினு சகோதரர்கள் கொடுக்காததுடன் வினித்ஜெலனுக்கு கொலைமிரட்டலும் விடுத்தார்களாம். இதுகுறித்து வினித்ஜெலன் 11.4.2018-இல் கொடுத்த புகாரின்பேரில்  புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலைய  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
    இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய  உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் காவலர்கள் ராஜீ,  ராஜவேலு,  ஜெயகுமார்,  மூவரசன்,  ஓட்டுநர் சசீதரன் ஆகியோர் கேரளத்துக்கு  புதன்கிழமை போலீஸ் வேனில் புறப்பட்டனர்.
    வியாழக்கிழமை காலை எர்ணாகுளம் மாவட்டம் புத்தன் குரூஸ் பகுதிக்கு சென்றனர்.  அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இருந்த பினுவை போலீஸார் பிடித்து வேனில் ஏற்றினர்.  வேன் புறப்பட தயாரானபோது திடீரென வேனின் முன்னும் பின்னும் ஜீப் வந்து நின்றது.  அதில் இருந்து இறங்கியவர்கள் பினுவை விடுவிக்குமாறு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    இதனால், போலீஸார் வேனை பூட்டிவிட்டு இறங்கினர்.  அப்போது, பினுவின் ஆதரவாளர்கள்  போலீஸாரைப் பிடித்துத் தள்ளித் தாக்கினர்.  பின்னர், போலீஸ் வேன் மீது கல்லை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர்.  இதில் வேனின் முன், பின், பக்கவாட்டு  கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கின. பின்னர், அவர்கள் பினுவை அழைத்துச் சென்றனர்.
    இந்த தாக்குதல் குறித்து அறிந்தும் கேரள போலீஸார் புதுவை போலீஸாருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், புதுவை போலீஸாரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.  பின்னர் காயம் அடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து புதுவை போலீஸார் அளித்த புகாரின்பேரில் எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புதுவை காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம்,  கேரள காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.  தப்பியோடிய மற்ற எதிரிகளை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai