Enable Javscript for better performance
விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் தேவை: முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

  

  விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் தேவை: முதல்வர் நாராயணசாமி

  By DIN  |   Published on : 23rd June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை என்றார் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி.
   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாட்டையொட்டி, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் "கருத்துரிமை' எனும் தலைப்பில் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
  இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ஊடகவியலாளர்களும்,  மக்களும் அரசை விமர்சனம் செய்தனர்.  விமர்சனங்களைத் தாங்கும் மனப்பக்குவம் இருந்ததால், அப்போது யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. என்னைப் பாராட்டுபவர்களை நான் ஒருபோதும் நம்பியதில்லை.  ஆனால்,  விமர்சனம் செய்பவர்களை,  தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஏற்றுக்கொள்வேன். விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வேண்டும்.
  நாட்டில் விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜகதான். ஊடக விமர்சனத்தை பார்த்து, தங்களை திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அதற்குப் பதிலாக படைப்பாளிகளையும் ஊடகங்களையும் ஒடுக்க நினைப்பது தவறு.  பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலை இப்போது உருவாகியுள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.
  பெருமாள் முருகன்: நாம் என்ன நினைக்கிறோமோ அந்தக் கருத்தை எழுத்து, பேச்சு போன்ற எந்த வடிவத்தில் இருந்தாலும்கூட வெளிப்படுத்துவதற்கான உரிமை வேண்டும். அந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்று கருதினாலும், அதனை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை சுதந்திரம், உரிமை வேண்டும்.  
   அதேபோல, நாம் வெளிப்படுத்திய பிறகு, அந்தக் கருத்துகளையொட்டி ஆதரித்தோ, எதிர்த்தோ விவாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தர வேண்டும்.  விமர்சனங்கள் குறித்து எடுத்துக்கொள்ள ஏதும் இல்லை என்றால், அதை ஒதுக்கிவிட வேண்டும். எடுத்துக்கொள்ள ஏதேனும் இருந்தால், சரிசெய்து கொள்ள வேண்டும். அதுதான் ஒரு கருத்தின் மீது நாம் வைக்கக் கூடிய விவாத முறை. எந்தக் கருத்தாக இருந்தாலும், அந்தக் கருத்தை பொருள்படுத்தி  விவாதிப்பதுதான் ஜனநாயக சமூகத்தினுடைய அடிப்படைத் தன்மை. 
   எதிர்தரப்பினருக்கு கருத்துரிமை பற்றித் தெரியாது, அதனுடைய கோட்பாடுகள் பற்றித் தெரியாது என்பதை நான் நம்பவில்லை.  பிறருடைய கருத்துகளை எதிர்கொள்வதற்கான வலு அவர்களிடம் இல்லை.  
  நாம் அறிவுத் தளத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் மரபு, கலாசாரம் என்று சொல்லி வெகுஜன தளத்தில் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதுதான்  இரண்டு தரப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு. ஆகவே, கருத்துரிமை சார்ந்து பேசும் விஷயங்கள் எதிர்தரப்பில் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன.
  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியலைப் பார்க்கும்போது, தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்ஸியவாதிகள்,  பெரியாரியக் கட்சிகள்,  அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய அமைப்பினர்  பல தளங்களில் ஒன்று சேர்ந்து செயல்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதுதான் நாம் கருத்துரிமை நோக்கிச் செல்லவும், காப்பாற்றுவதற்கும் அடிப்படையானது என்றார்.
  வைரமுத்து: தமிழர்களுக்கு கருத்துரிமை என்பது பிறப்புரிமை. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என ஆண்டவரையே எதிர்த்துக் கேட்டது தமிழ்ச் சமூகம்.  அறிவு,  ஆராய்ச்சி,  அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த கருத்துரிமை மிக அவசியம். கருத்துகள் கடத்தப்படும்போதுதான் வளர்ச்சி ஏற்படுகிறது. 
   இந்து மதத்தில் இருக்கும் சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. கடவுள் மறுப்பு உடையவர்கள்,  நாத்திகம் பேசுபவர்களுக்குக் கூட இந்து மதம் இடம் தருகிறது.  எந்த மதமும், எந்தச் சிந்தனையும் முழுமையானது அல்ல. அது மாறிக்கொண்டே இருக்கும். கருத்துரிமை இருந்தால்தான் புதிய சிந்தனை பிறக்கும்.  முற்போக்கு சிந்தனைவாதிகள்,  பெரியாரின் கொள்கைகளை தூக்கிப்பிடிக்க வேண்டும்.
  ஆங்கிலேயர் காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்துச் சுதந்திரம் இப்போது எனக்கும் (வைரமுத்து),  பெருமாள் முருகனுக்கும் இல்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதுதான் நாகரிகத்தின் உச்சம். சகிப்புத்தன்மை இல்லாத நாடு வளர்ச்சி அடையாது.  சகிப்புத்தன்மை இருந்தால்தான் ஜனநாயகம் மேன்மை அடையும். 
   கருத்துரிமையை தடுக்கும்போது, அது இரண்டு மடங்கு வீரியம் பெற்றுவிடுகிறது. வேண்டாத கற்களை செதுக்கும்போது தான் அழகான சிற்பம் பிறக்கிறது.  அதுபோல மதவாதம், அறியாமை, ஏழ்மை,  பேதம்,  சாதி ஆகியவற்றை ஒதுக்கினால் நல்ல மனிதன் பிறப்பான் என்றார் கவிஞர் வைரமுத்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai