Enable Javscript for better performance
இலவசம் கொடுத்துவிட்டு ஏழைகளின் தண்ணீரை கொள்ளை அடிக்கின்றனர்: கிரண் பேடி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  இலவசம் கொடுத்துவிட்டு ஏழைகளின் தண்ணீரை கொள்ளை அடிக்கின்றனர்: கிரண் பேடி குற்றச்சாட்டு

  By  புதுச்சேரி  |   Published on : 24th June 2018 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kiranbedi

  இலவசங்களை கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு, ஏழைகளின் தண்ணீரை கொள்ளை அடிக்கின்றனர் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி குற்றஞ்சாட்டினார்.
   புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை காலை, பாகூர் மூலநாதர் கோயில் குளத்தை பார்வையிட்டு மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏற்கெனவே அவர் ஆய்வுக்கு வந்து உத்தரவிட்டு இருந்தும், குளத்தில் குப்பைகளும், கழிவு நீரும் அகற்றப்படாமல் இருப்பதைக் கண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு கண்டித்தார்.
   பின்னர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளுடன் பொலிவுறு பாகூர் திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மாவட்ட துணை ஆட்சியர் உதயகுமார், உள்ளாட்சி துறை இயக்குநர் மலர்கண்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செüந்திராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், பொதுப்பணித் துறை அதிகாரி தாமரை புகழேந்தி, மின் துறை உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் பாகூர் ஏரியில் மீன்பிடி குத்தகை தொடர்பாக வழக்கு இருந்து வரும் நிலையில், சிலர் மீன்களை பிடித்து விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தார். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட ஆளுநர், வழக்கு முடிவுக்கு வரும் வரை மீன்களை பிடிக்க அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   இதைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, தோட்டக்கலை சாகுபடி தொடர்பாக தனியார் பங்களிப்புடன் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநர் கிரண் பேடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
   பொலிவுறு கிராம திட்டத்தில், நீர்நிலை மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பராமரித்து, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், வேளாண் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   இரண்டு கிராமங்களை தத்தெடுத்து என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும் என்பது அடிப்படை நோக்கம்.
   இது தொடர்பாக, வட்டார வளர்ச்சி அதிகாரி, உங்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்வார்கள். அதில், கலந்து கொண்டு பயனடைய வேண்டும். மீண்டும் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
   அப்போது அக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், இதுவரை பாகூர் பகுதியில் 11 முறை ஆய்வு செய்துள்ளீர்கள். ஆனால், எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது பொலிவுறு கிராம திட்டத்துக்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்கிறீர்கள். அப்படியானால், இப்பகுதியின் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ.,வை ஏன் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் கிரண் பேடி, இந்தக் கூட்டம் மகளிர் குழுவினருடனான கூட்டம் என பதில் கூறினார்.
   அதற்கு அந்த நபர், அப்படியானால் மற்றவர்களை ஏன் பங்கேற்க அழைத்தீர்கள்? என மீண்டும் தனது கேள்வியை தொடர்ந்தார்.
   இதையடுத்து, ஆளுநர், அந்த நபரின் அருகே வந்து, கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன். தயவு செய்து உட்காருங்கள் என்று பலமுறை கூறினார். இதையடுத்து, அவர் நாற்காலியில் அமர்ந்து அமைதியானார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
   ஆய்வுக்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு:
   ஏழைகளின் தண்ணீர் கொள்ளையடிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரில் நீச்சல் அடிக்கின்றனர். இலவச அரிசி மற்றும் இலவசத் திட்டங்களால் ஏழைகள் அமைதியாக்கப்படுகின்றனர். அப்போது ஏழைகளுக்கு சொந்தமான தண்ணீர், அவர்களின் நிலத்தில் இருந்தே கொள்ளை அடிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் மட்டும் பணியாற்றாமல் களப் பணிக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai