Enable Javscript for better performance
தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
     இந்த சங்கத்தின் 14-ஆவது தமிழ் மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுவையில் இருந்து 540 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரதிநிதிகளின் விவாதத்துக்குப் பிறகு 137 பேர் கொண்ட புதிய மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. அந்த மாநிலக் குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கெüரவத் தலைவராக ச.தமிழ்ச்செல்வன், தலைவராக சு.வெங்கடேசன், பொதுச்செயலாளராக ஆதவன்தீட்சண்யா, பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     தீர்மானங்கள்: அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள், மத அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். அரசு நூலகங்களை வலுப்படுத்தி, அரசியல் உள்ளிட்ட அனைத்து நூல்களும் வாங்கப்பட வேண்டும். இது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்.
     1897-இல் முதல் சலனப்படம் திரையிடப்பட்ட சென்னை விக்டோரியா ஹால், தமிழ் சினிமா நூற்றாண்டையொட்டி தமிழ் சினிமா ஆவணக் காப்பகமாக்கப்பட வேண்டும். கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் திறந்து விடப்பட வேண்டும். அனைத்து நகரங்கள், ஊர்களில் அரசு மன்றங்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டுவது, தமிழக அரசும் இதைச் செயல்படுத்த வேண்டும்.
     தமிழகத்தில் மூடநம்பிக்கைகள், மனித சுய மரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகள் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைஅரசு மேற்கொள்ள வேண்டும். சாதி ஆணவக் கொலைகளை தடுக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
     உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்பட வேண்டும். இந்தித் திணிப்பை ஏற்பதற்கில்லை. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதில் மறுப்பில்லை. ஆனால், அதுவே வாழ்வின் ஆதாரமாக்கப்படுவது எதிர்க்கப்படவேண்டியது. தமிழ்வழிக் கல்வி வாய்ப்புக்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai