Enable Javscript for better performance
நவீன மீட்டர் பொருத்த எதிர்ப்பு: மின்துறை அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    நவீன மீட்டர் பொருத்த எதிர்ப்பு: மின்துறை அலுவலகம் முற்றுகை

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவீன மின்மீட்டர்களை பொருத்த எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி மின்துறை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்கு முறை இணை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், புதுவையை ஆளும் அரசானது கடந்த 3 மாதங்களுக்கு முன் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை மின்கட்டண உயர்வு ரத்து செய்யப்படவில்லை.
     இதனிடையே, நகரப்பகுதியில் பழைய மின் மீட்டரை அகற்றிவிட்டு புதிதாக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த மீட்டர் பொருத்தப்பட்டதில் இருந்து ரீடிங் அதிகமாகி, ரூ.500 மின் கட்டணமாக செலுத்தியவர்கள் ரூ.1,500 வரை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
     இதனால் பாதிக்கப்பட்ட உப்பளம் தொகுதி பொதுமக்கள் அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன் தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்துறைக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
     போராட்டம் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:
     புதுவையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
     ஆனால், நன்றாக இயங்கிக்கொண்டிருந்த மின் மீட்டரை அகற்றிவிட்டு சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை அதிக விலை கொடுத்து மாற்றப்பட்டது. இந்த மீட்டர் மாற்றியது முதல் வழக்கத்துக்கு மாறாக இரு மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடந்த 2 நாள்களுக்கு முன்னர் ஊர் பஞ்சாயத்தார் மின்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
     இதுகுறித்து ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். சீன மீட்டரை அகற்ற வேண்டும், மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai