Enable Javscript for better performance
வெளிநாட்டுப் பயணத்துக்காக நிதி நிலை அறிக்கை தாக்கலை தள்ளி வைப்பதா? பாஜக கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டுப் பயணத்துக்காக நிதி நிலை அறிக்கை தாக்கலை தள்ளி வைப்பதா? பாஜக கண்டனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரசு நிதி நிலை அறிக்கை தாக்கலை தள்ளிவைத்தது மக்கள் விரோதச் செயல் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்தார்.
     புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில அக்கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு இரவோடு இரவாக பேருந்து கட்டணத்தை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் பேருந்தில் பயணிக்க ரூ.50 வரை மக்கள் செலவு செய்து வருகின்றனர். ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும்.
     ஏடிஎம் பண மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை பாதுகாக்கும் வகையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் முதல்வர் நாராயணசாமி காலம் தாழ்த்துகிறார். புதுவை ஆளுநர் தலையிட்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
     பெரிய மாநிலமான தமிழகத்தில் அனைத்துப் பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு தடையில்லை என ஆட்சியாளர்களே கூறியுள்ளனர். சிறிய மாநிலமான புதுவைக்கும் இது பொருந்தும் என்பதை முதல்வர் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆளுநர் களஆய்வு செய்வதை பாஜக பாராட்டுகிறது.
     தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்களை மாநில அரசே நடத்துகிறது. புதுச்சேரியில் 12 மையங்கள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மையங்கள்தான் செயல்படுகின்றன. இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
     வீட்டு வரி, தொழில் வரி, மின்சார மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு, புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள குப்பை வரி, புதை சாக்கடை இணைப்பு கட்டணம் ஆகியவைகளை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்.
     புதுவை நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்காரணமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் விரோத செயல்.
     மத்திய பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜூலை 10-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் சாமிநாதன்.
     பேட்டியின்போது, நியமன எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செல்வகணபதி, கே.ஜி.சங்கர், மாநில துணைத் தலைவர் ஆர்.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பொதுச்செயலர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai