Enable Javscript for better performance
கள ஆய்வுக்குச் செல்லும் ஆளுநர்களுக்கு எதிராகப் போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுவை முதல்வ- Dinamani

சுடச்சுட

    

    கள ஆய்வுக்குச் செல்லும் ஆளுநர்களுக்கு எதிராகப் போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள ஆய்வுக்குச் செல்லும் ஆளுநர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு என்றும், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பணியைத் தடுத்தால் மட்டுமே சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்றும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
     தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதோடு, அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
     இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதானார்.
     இந்த நிலையில், ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்று தமிழக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளில் ஆளுநரது அலுவலகத்தில் பணியைத் தடுத்தால் மட்டுமே குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
     ஆளுநர்கள் பல மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அதற்கு அதிகாரம் இல்லை என்று போராட்டம் நடத்துவது குற்றம் கிடையாது. ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் விதிமுறைகளை மீறும்போது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு.
     ஆனால், இந்த விவரம் தெரியாமல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. புதுவை ஆளுநரும் இதை அப்படியே பின்பற்றி செய்தி வெளியிட்டுள்ளார்.
     புதுவை மாநிலமானாலும் சரி, தமிழகமானாலும் சரி, வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் சரி அந்த மாநில அரசுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடவோ, அந்த அரசுகளின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது.
     குடியரசுத் தலைவராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், துணைநிலை ஆளுநராக இருந்தாலும் சரி மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட அதிகாரம் கிடையாது. தமிழக ஆளுநரைப் போல புதுவை ஆளுநரும், ஆளுநரின் பணியைத் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று விவரம் தெரியாமல் தெரிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறைதான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண் பேடி பாகூருக்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது 11 முறை ஆய்வுக்கு வந்த நீங்கள் சாதித்தது என்ன? எனப் பொதுமக்கள் கேள்வி கேட்டனர்.
     தொகுதி எம்.எம்.ஏ. இல்லாமல் எப்படி வரலாம் எனவும் கேட்டனர். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் ஆளுநர் கிரண் பேடி திரும்பியிருக்கிறார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் தெரிவிக்காமல் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
     ஆளுநரின் விதிமீறல்கள் குறித்து பலமுறை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், ஆளுநர் விதிமுறைகளை மீறித் தொடர்ந்து செயல்படுகிறார்.
     அவரது செயல்பாட்டுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. மக்களுக்கான நலத் திட்டங்களை தொடர்ந்து முடக்குகிறார். இதனால், புதுவை ஆளுநரை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். தேவைப்பட்டால் நானே நேரடியாக வழக்குத் தொடுப்பேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
     "மத்திய பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை'
     மத்திய பாஜக ஆட்சியில் அறவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
     புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
     முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தை ஹிட்லர் ஆட்சி என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றனர். இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பற்றி இடதுசாரிக் கட்சிகள் விமர்சிக்கலாம். மதச்சார்பற்ற கட்சிகள் விமர்சிக்கலாம். ஆனால், நெருக்கடி நிலை பற்றி விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி கிடையாது.
     மத்திய பாஜக ஆட்சியில் தற்போது அறிவிக்கப்படாத நிதி நெருக்கடி நிலைதான் உள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாஜகவின் புலனாய்வுப் பிரிவாக மாறிவிட்டது. வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் பாஜகவுக்கு வேண்டாதவர்கள், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை களங்கப்படுத்துவதற்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
     பாஜகவின் அராஜகத்தால் மத்தியில் உள்ள அதிகாரிகள் பயத்தில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது.
     எல்லாத் துறைகளிலும் பாஜகவின் தலையீடு அதிகமாக உள்ளது. மாநில அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் பாஜக தேவையில்லாமல் தலையிடுகிறது. இப்படி அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்திய பாஜகவுக்கு, இந்திரா காந்தி ஆட்சியைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
     ஏடிஎம் பண மோசடி சம்பவம்:
     நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகள் தப்பாமல் இருக்கவும், பிணையில் வெளிவராமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.
     ஏடிஎம் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் பெயர்களை பாஜக தெளிவாக வெளியிட வேண்டும் என்றார் அவர்.
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai