Enable Javscript for better performance
காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய எதிர்ப்பு: புதுச்சேரியில் போராட்டம்- Dinamani

சுடச்சுட

  

  காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய எதிர்ப்பு: புதுச்சேரியில் போராட்டம்

  By    புதுச்சேரி  |   Published on : 27th June 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பல்வேறு சமூக அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய கால நீட்டிப்பு செய்து புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக் கண்டித்தும், மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டுக் குழு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   போராட்டத்தின்போது சுகுமாறன் பேசியதாவது:
   மார்க் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதால் நிலக்கரி துகள்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் முற்றிலும் சீரழிந்து வருவதோடு, மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு, காரைக்கால் டி.ஆர்.பட்டினம், கீழவாஞ்சியார், வாஞ்சியூர் குப்பம், வடக்கு வாஞ்சியூர், நாகை மாவட்டம், நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
   கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மார்க் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டு 30.4.2018-க்குள் முழுவதும் மூடப்பட்ட கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கையாளப்பட வேண்டும் இல்லையெனில் நிலக்கரி கையாள்வது தடை செய்யப்படும் என்றும் எச்சரித்தனர். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மார்க் துறைமுகத்துக்கு, நிலக்கரி கையாள்வதற்கு முழுவதும் மூடப்பட்ட கன்வேயர் பெல்ட் முறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதை செய்யாத துறைமுக நிர்வாகத்தின் மீது புதுவை அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
   நிலக்கரி இறக்குமதி செய்ய கால நீட்டிப்பு செய்துள்ளதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் சுகுமாரன்.
   முன்னதாக, போராட்டக்காரர்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டுக் குழு அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தொடக்கிவைத்தார்.
   இதில் எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தமிழ் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருமால்வளவன், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
   இதில் காரைக்கால் எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் பிலால், புதுவைத் தலைவர் அப்துல்லாஹ், நாகூர் நிலக்கரி எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவர் உமர் ஷெரிப், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அமைப்பாளர் ஸ்ரீதர், லோக் ஜனசக்தி புரட்சிவேந்தன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி தமிழ்மாறன், தமிழர் களம் நிர்வாகி அழகர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை நிர்வாகி பாவாடைராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   போராட்டக்காரர்கள் மறைமலை அடிகள் சாலை வழியாக மாசுக்கட்டுப்பாட்டுக் குழு அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது, 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai