Enable Javscript for better performance
மின்கட்டண பாக்கிதாரர்கள் பட்டியலில் அமைச்சரின் சகோதரர், முன்னாள் எம்எல்ஏ- Dinamani

சுடச்சுட

    

    மின்கட்டண பாக்கிதாரர்கள் பட்டியலில் அமைச்சரின் சகோதரர், முன்னாள் எம்எல்ஏ

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மின்கட்டண பாக்கிதாரர்கள் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
     இதில், அமைச்சர் ஷாஜகானின் சகோதரர் குத்தூஸ் மரைக்காயர், முன்னாள் எம்எல்ஏ உள்பட 283 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் உத்தரவுப்படி பத்திரிகைகளில் மின் கட்டண பாக்கி அதிகளவில் வைத்துள்ளோர் விவரங்கள் செவ்வாய்க்கிழமை வெளியானது. வணிக நிறுவனங்கள் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 68 லட்சம் வரையும், வீட்டு உபயோகத்திற்கு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 22 லட்சம் வரையும், தொழிற்சாலைகள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையும் மின் கட்டண பாக்கி வைத்துள்ள 283 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
     தொழில் மற்றும் வணிக மின்நுகர்வோர் பாக்கிப் பட்டியலில் முதல் இடத்திலும், மூன்றாவது மற்றும் 7-ஆவது இடத்திலும் முன்னாள் எம்எல்ஏ எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பெயர் உள்ளது. அவருக்கு இரண்டையும் சேர்த்து ரூ. 74 லட்சம் பாக்கி உள்ளது.
     அதேபோல, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகானின் சகோதரர் எம்.ஓ.எச். குத்தூஸ் மரைக்காயர் ரூ. 6 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளார். மூடப்பட்ட ஏர்செல் நிறுவனம் ரூ. 6.14 லட்சம் பாக்கி வைத்துள்ளது.
     இந்தப் பட்டியலில் 46 தொழிலதிபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்களும் உள்ளன. வீட்டு உபயோக மின்நுகர்வோர் பட்டியலில் வில்லியனூர் மணவெளி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த கண்ணன் ரூ. 22.29 லட்சம் பாக்கி வைத்து முதலிடத்தில் உள்ளார்.
     குறைந்தபட்சம் ரூ. 2.64 லட்சம் வரை கட்டணம் செலுத்தாதவர் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அண்மைக் காலமாக மின் கட்டணம் செலுத்தத் தவறியோர் பட்டியலில் பெரிய காலாப்பட்டு ஸ்ரீலட்சுமி புல்வரிசர்ஸ் நிறுவனம் ரூ. 3.42 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
     இதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் பதிவு செய்துள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்கட்டண பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை மின்துறை வெளியிட்டுள்ளதைப் போல, வருவாய் ஈட்டும் முக்கிய துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிப்பு வெளியிடுவதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள கடன்களை வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறை சொத்து வரி, தொழில்வரி, பொழுதுபோக்கு வரி உள்ளிட்டவைகளில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க மீட்புத் திட்டம் உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     இது தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் வரும் ஜூலை 9-ஆம் தேதி நடத்தப்படும். மீட்டெடுக்கப்படும் நிதி புதுவையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
     ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து, மின்கட்டண பாக்கி பட்டியல் வெளியான நாளில் ரூ. ஒரு கோடியே 5 லட்சம் மின்கட்டண பாக்கி வசூலாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai