Enable Javscript for better performance
ஆன்மிகத் தலங்களில் "இஸ்ரோ உதவியுடன் பக்தர்களுக்கு தொலைநிலை மருத்துவ வசதி'- Dinamani

சுடச்சுட

    

    ஆன்மிகத் தலங்களில் "இஸ்ரோ உதவியுடன் பக்தர்களுக்கு தொலைநிலை மருத்துவ வசதி'

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி, குருவாயூர், மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களில் பக்தர்களுக்கு இஸ்ரோ உதவியுடன் தொலைநிலை மருத்துவச் சேவை அளிக்க ஜிப்மர் ஏற்பாடு செய்துள்ளது.
     முதல் கட்டமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேர தொலைநிலை மருத்துவச் சேவையை இஸ்ரோ உதவியுடன் ஏற்கெனவே புதுவை ஜிப்மர் வழங்கி வருகிறது.
     இந்த நிலையில், தென்னிந்தியாவில் 4 வழிபாட்டுத் தலங்களில் தொலைநிலை மருத்துவச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் தொலைநிலை மருத்துவ தொடர்பு அதிகாரி பேராசிரியர் சிட்டோரியா கூறியதாவது:
     சபரிமலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உதவியுடன் விண்வெளி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் தொலைநிலை மருத்துவச் சேவை வழங்கும் மையமாக ஜிப்மர் உள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். பக்தர்களுக்கு திடீர் மயக்கம், காயம், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் தொலைத்தொடர்பின் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குகிறோம்.
     ஜிப்மரின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொலைநிலை மருத்துவ மையம் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் இணையதள வழியாக மருத்துவச் சேவையை இலவசமாக வழங்கி வருகிறோம். இதற்காக விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஜிப்மர் முன்னிலையில் உள்ளது.
     மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவை ஜிப்மரை தென்னிந்தியாவின் தொலைநிலை மருத்துவ மையமாக அங்கீகரித்துள்ளது. தற்போது 4 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன என்றார் அவர்.
     இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் விவேகானந்தம் கூறியதாவது:
     ஆந்திரத்திலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், கேரளத்தில் குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், தமிழகத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய 4 வழிபாட்டுத் தலங்களில் தொலைநிலை மருத்துவச் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai