Enable Javscript for better performance
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பவர்கள் என்னிடம் நேரடியாகச் சொல்லலாம்: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பவர்கள் என்னிடம் நேரடியாகச் சொல்லலாம்: கிரண் பேடி

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பவர்கள் தன்னிடம் நேரடியாக வந்து சொல்லலாம் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
     புதுவை மின்துறையில் ரூ.100 கோடிக்கும் மேல் கட்டணப் பாக்கி உள்ளது. ஆனால், அதை வசூலிக்காமல் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி நிலுவை மின் கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாக மின் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை செய்தித்தாள்களில் வெளியிடுமாறு உத்தரவிட்டார்.
     இதையடுத்து, பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.ஒரு கோடிக்கு மேல் மின் கட்டணப் பாக்கி வசூலானது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் கிரண் பேடி கட்டணப் பாக்கி வசூலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் புதன்கிழமை புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
     அங்கு கண்காணிப்புப் பொறியாளர் ரவி மற்றும் செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மின் கட்டணப் பாக்கி எவ்வாறு வசூல் ஆகிறது என்று கேட்டபோது அதிகாரிகள் மின் கட்டணப் பாக்கியை மக்கள் அதிகமாகச் செலுத்தி வருவதாகவும், தற்போது வரை ரூ.2.5 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
     அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது:
     மின் கட்டணத்தை தீவிரமாக வசூலிக்கக் கூறியுள்ளேன். மின் துறை மட்டுமன்றி, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட வருவாய் ஈட்டக்கூடிய துறைகளும் அரசுக்கு வரவேண்டிய கட்டணம், வரிகளை வசூலிக்க வேண்டும். இந்த ஆண்டு புதுச்சேரிக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்கும் ஆண்டாக இருக்கக் கூடாது. புதுவையிலேயே நிதியைப் பெருக்குவதற்கான ஆண்டாக இருக்க வேண்டும்.
     இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது. ம த்திய அரசிடம் இருந்து பெறும் கடனை வருங்கால சந்ததியினர் அடைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கியைச் செலுத்த வேண்டும்.
     அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. எனக்கு அதிகப்படியான பொறுப்புகள் உள்ளன. அதில் மிகப் பெரியது புதுவை மக்களுக்குச் சேவை செய்வதாகும். சராசரி மனிதனுக்கு நீதியைப் பெற்றுத் தருவது, வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.
     எனக்கு அதிகாரம் இல்லை எனச் சொல்பவர்கள் என்னை நேரடியாகச் சந்தித்து சொல்ல வேண்டும். உண்மையில் புதுவையை முன்னேற்ற எனக்கு அதிகப்படியான பொறுப்புகள் உள்ளன என்றார் கிரண் பேடி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai