Enable Javscript for better performance
கருவடிகுப்பத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கருவடிகுப்பத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க எதிர்ப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே கருவடிகுப்பத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
     இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகானிடம், அந்தக் கட்சியின் கருவடிக்குப்பம் கிளைச் செயலாளர் கருணாஜோதி தலைமையில் நிர்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு:
     புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் புதுச்சேரி நகராட்சி கழிவுகளைக் கொட்டியதன் விளைவாக பல்வேறு இனம் புரியாத நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகினோம். இதனால் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
     இருப்பினும், புதுச்சேரி நகராட்சியின் கழிவு நீர் சேகரிப்பு பகுதியாக கருவடிக்குப்பம் செயல்பட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி நகராட்சியின் ஆட்டுப் பட்டியை கருவடிக்குப்பத்தில் அமைக்க உத்தேசித்துள்ளதாக அறிகிறோம்.
     ஏற்கெனவே சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் கருவடிக்குப்பம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்டுப்பட்டி அமைப்பது ஏற்புடையதல்ல. ஆட்டு இறைச்சிக் கழிவுகள், ரத்தக் கழிவுகள் மேலும் இப்பகுதியை மாசுபட வைக்கும் என்பதோடு, பொதுமக்கள் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும்.
     அதனால், கருவடிக்குப்பம் பகுதியில் ஆட்டுப்பட்டி அமைக்கும் முயற்சியை கைவிட்டு, மக்கள் சுகாதாரத்துடன் வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
     கட்சியின் தொகுதி பொருளாளர் செல்வராசு, கிளை உறுப்பினர்கள் பசுபதி, கனகராஜ், ஆறுமுகம், செல்வம், வெங்கடேசன், சாந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai