Enable Javscript for better performance
சட்டங்களை நடைமுறைப்படுத்தி வழிகாட்டுவது ஆளுநரின் கடமை- Dinamani

சுடச்சுட

    

    சட்டங்களை நடைமுறைப்படுத்தி வழிகாட்டுவது ஆளுநரின் கடமை

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டங்களை நடைமுறைப்படுத்தி வழிகாட்டுவது ஆளுநரின் கடமை என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
     இது குறித்து அவர் தனது கட்செவி அஞ்சலில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
     அனைத்துச் சட்டங்களும் அரசு ஊழியர்களுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. அரசு அதிகாரி தனது பொறுப்பை நிறைவேற்ற அதை எப்படி செய்கிறார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. புதுவையில் தினமும் நிதிப் பற்றாக்குறை பற்றி புலம்புகிறோம். ஆனால் அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
     மின் கட்டணப் பாக்கி மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் உள்ளதை உதாரணமாக தெரிவிக்கிறேன். இதுபோன்ற மோசமான நிலைக்கு ஏன் அனுமதித்தோம் எனக் கேட்டதற்கு, அதிகாரிகள் மின் பாக்கிக்காக மின் இணைப்பை துண்டிக்கும்போது குறுக்கீடுகள் இருந்தன. மேலும் போலீஸ் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
     இதனால் கட்டணத்தை செலுத்தி மின்சாரம் பெறுபவர்களுக்குக்கூட, மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் அதிகாரத்தை வாங்கி வைத்திருந்தோம். யாருடைய செலவில் நாம் அவர்களை அனுமதிக்கிறோம்.
     சட்ட விதிகளின்படி நடப்பதே நல்ல ஆட்சி. அதாவது, சட்டங்களை சரியாகவும், பயனுள்ள வழியிலும் அமல்படுத்துவதாகும். அரசு அதிகாரிகளை சட்டத்தின்படி செயல்பட அனுமதிக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்க வேண்டும். புதுவை அவ்வாறு செயல்படுவதில் திறமையற்றதாக இருப்பதே நிதிப் பற்றாக்குறைக்குக் காரணம். ஆனால், நாம் பிறரை குற்றம் சாட்டி வருகிறோம். அனைவரும் குறித்த நேரத்தில் மின் கட்டணம் மற்றும் வரிகளை செலுத்த வேண்டும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் சட்டங்களை அமல்படுத்தி வசூலிக்க வேண்டும்.
     அப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் குறிக்கிட்டு தடுக்கக்கூடாது. அரசு அதிகாரிகளும் பயமின்றியும், யாருக்கும் சாதகமின்றியும் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும். அதன்படி செயல்பட்டால் புதுச்சேரி வளமானதாக மாறும். பயமும், யாருக்கும் சாதகமும் இன்றி சட்டங்களை நடைமுறைப்படுத்த வழிகாட்டுவது துணைநிலை ஆளுநரின் கடமை மற்றும் பொறுப்பு. இல்லையெனில் பதவியில் இருப்பதற்கு அர்த்தம் இல்லை. வரி மற்றும் கட்டணப் பாக்கி வைத்துள்ளவர்கள் விரைவில் தானாக செலுத்த வேண்டும் என்று புதுவை மக்களை கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் செய்தித்தாள்களில் உங்களது பெயர்களை படிக்கவும், கேபிள் டிவிக்களில் பார்க்கவும், பண்பலை வானொலிகளில் கேட்கவும் தயாராக இருங்கள். அனைத்துத் துறைகளும் பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு அவமானப்படுத்த தயாராகி வருகின்றன.
     கட்டணப் பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதன் மூலம் நன்மை நடைபெற்றுள்ளது.
     அதனைத் தொடர்ந்து பலர் கட்டணப் பாக்கியை செலுத்தியுள்ளனர். இது எதிர்கால சந்ததிக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai