Enable Javscript for better performance
மின்இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மின்இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் முன்னறிவிப்பு இன்றி மின் இணைப்புகளைத் துண்டித்த மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
     புதுவை மாநிலம் முழுவதும் மின் கட்டணப் பாக்கியை உடனடியாக வசூலிக்கும்படி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டதின் பேரில், மின்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
     அதன் ஒரு பகுதியாக, உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கண்டக்டர் தோட்டம் பகுதி அரசு குடியிருப்புகளில் மின்துறை உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை காலை முன் அறிவிப்பின்றி 200 குடியிருப்புகளில் இருந்த மின் இணைப்புகளைத் துண்டித்தனர்.
     இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மின்துறை அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
     பின்னர், இதுகுறித்து தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ. இரா.சிவா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாதத்துக்கு ரூ.150 கட்டிய மின் கட்டணம் கடந்த ஓராண்டாக ரூ.1,500 வருவதாகவும், குடியிருப்புக்கு வருவதற்கு முன் அமைக்கப்பட்ட மின் மீட்டர்கள் தவறாக ஓடுவதாகவும், அதனால் கட்டணம் கூடுதலாக வருவதாகவும், இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு மின் மீட்டர்கள் உடனடியாக சரிசெய்யப்படும் என்றும், அதன்பிறகு மின்கட்டணம் கட்டலாம் என்றும் தெரிவித்த நிலையில், தற்போது ஓராண்டாகியும் பிரச்னை தீரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
     மேலும், தற்போது ஓராண்டு கட்டணமாக ஆயிரக்கணக்கில் போட்டுள்ளதாகவும், அதற்கு காலதாமத கட்டணமாக பல ஆயிரம் செலுத்தச் சொல்வதாகவும், தற்போது திடீரென முன் அறிவிப்பின்றி மின் இணைப்புகளைத் துண்டிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
     பின்னர், மின்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய எம்எல்ஏ சிவா, அதிகளவில் வந்துள்ள மின்கட்டண பாக்கி குறித்து முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி முடிவு செய்வதாகவும், அதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
     எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு உடனடியாக கொடுக்கப்பட்டது.
     மேலும், பொதுமக்களிடம் ஒரு வாரத்தில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதாகவும், தொடர்ந்து பொதுமக்கள் மாதம்தோறும் மின் கட்டணத்தை தவறாமல் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai