Enable Javscript for better performance
தனிப்படை போலீஸார் மீது தாக்குதல் சம்பவம்: புதுவை டி.ஜி.பி.யிடம் அறிக்கை சமர்ப்பிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனிப்படை போலீஸார் மீது தாக்குதல் சம்பவம்: புதுவை டி.ஜி.பி.யிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

    By  புதுச்சேரி  |   Published on : 29th June 2018 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனிப்படை போலீஸாரை கேரள மாநிலக் கும்பல் தாக்கிய விவகாரம் தொடர்பாக புதுவை காவல் துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
     புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் வினித்ஜெலன்(30). இவர், மேட்டுப்பாளையம் தொழில் பேட்டையில் பிளாஸ்டிக் காகித உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் கேரளத்தைச் சேர்ந்த பினு, அவரது சகோதரர்கள் சாஜூ, ராஜூ ஆகிய 3 பேர் ரூ. 30 லட்சத்துக்கான பொருள்களை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வினித்ஜெலன் புகார் அளித்தார்.
     அதன் பேரில், போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
     இதனிடையே, மோசடியில் ஈடுபட்ட பினுவை பிடிக்க மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் குற்றப் பிரிவு போலீஸார் ராஜூ, ராஜவேலு, ஜெயகுமார், மூவரசன், ஓட்டுநர் சசிதரன் ஆகியோருடன் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், புத்தன்குரூஸ் பகுதிக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி போலீஸ் வேனில் சென்றனர்.
     அங்குள்ள ஒரு ஆலையில் இருந்த பினுவை போலீஸார் பிடித்தபோது, அவரது ஆதாரவாளர்கள் திடீரென போலீஸ் வேனை மறித்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், வேன் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதுடன், பினுவுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.
     இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீஸார் பினு, அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான பினு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.
     எதிரியை கைது செய்தபோது, தாக்குதலுக்கு ஆளான போலீஸார் கேரளத்தில் இருந்து கடந்த ஜூன் 22-ஆம் தேதி புதுச்சேரி திரும்பினர். இதனிடையே, எர்ணாகுளத்தில் புதுவை போலீஸார் தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய விடியோ வெளியானது. எனவே, கேரளத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு புதுவை காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம் உத்தரவிட்டார்.
     அதன்பேரில், அங்கு நடந்த முழு விவரங்களையும், அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் 4 பக்க அறிக்கையாகத் தயாரித்து காவல் துறை இயக்குநரிடம் புதன்கிழமை சமர்ப்பித்தனர்.
     இதையடுத்து, இந்த அறிக்கையை கேரள மாநிலக் காவல் துறை இயக்குநருக்கு புதுவை காவல் துறை இயக்குநர் விரைவில் அனுப்பிவைக்க உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai