Enable Javscript for better performance
மின் துறையில் கடன் வசூல் நடவடிக்கை: ஆளுநருக்கு அதிமுக பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மின் துறையில் கடன் வசூல் நடவடிக்கை: ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்துறையில் அதிரடியாக கடன் தொகையை வசூலிக்க ஆளுநர் கிரண் பேடி எடுத்த நடவடிக்கைக்கு அதிமுக பாராட்டு தெரிவித்தது.
     இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     நிகழ் ஆண்டுக்கான கள், சாராயக் கடைகளுக்கான குத்தகை வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது. ஆனால், இதுவரை எந்தக் கடைகளும் ஏலம் விட்டு நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், மாதத்துக்கு ரூ. 9 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும். மின் துறை, உள்ளாட்சித் துறை, வணிக வரித் துறை, கலால் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் ரூ. 850 கோடிக்கும் மேல் கட்டணம், வரி நிலுவை உள்ளது. எனவே வட்டியையும், அபராத வட்டியையும் தள்ளுபடி செய்து அசலை மட்டும் வசூலிக்க அரசு கொள்கை முடிவை எடுத்து வசூலிக்க வேண்டும் என அதிமுக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது.
     ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மின் துறையில் உள்ள நிலுவை தொகையை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுபோல, வட்டி, அபராத வட்டியைத் தள்ளுபடி செய்து கடனை திருப்பிச் செலுத்தும் கொள்கை முடிவையும் ஆளுநர் எடுக்க வேண்டும்.
     ஆளுநர் கிரண் பேடி மின் துறையின் நீண்ட கால கடன்களை நேரிடையாகப் பார்வையிட்டு, வசூல் செய்வது பாராட்டுக்குரியது. அதுபோல, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்திலும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் ரூ. 1, 200-க்கு டிஜிட்டல் மீட்டர் விற்கும் நிலையில், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு நேர் எதிராக சீனா மீட்டர்களை ரூ. 14 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளனர். 34 ஆயிரம் மீட்டர்கள் ரூ. 48 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. இந்த மீட்டர்களில் வாடிக்கையாளர்கள் செலவு செய்த மின்சாரத்தைவிட கூடுதலாக மின் அளவைக் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்தும் ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai