வரி நிலுவை வைத்துள்ளோர் பட்டியல் இன்று வெளியாகும்: ஆளுநர் கிரண் பேடி
By புதுச்சேரி | Published on : 29th June 2018 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உள்ளாட்சிகளில் வரி நிலுவை வைத்துள்ளோர்களின் முதல் கட்டப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) வெளியாகும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
மின் துறையில் நிலுவையில் உள்ள கட்டணத் தொகையை வசூலிக்க உத்தரவிட்டு, தற்போது அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, உள்ளாட்சிகளில் வரி நிலுவைத் தொகைகளை வசூல் செய்வது தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் மலர்கண்ணன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர், வணிகக் கூட்டமைப்புத் தலைவர் சிவசங்கர் ஆகியோருடன் ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்துக்குப் பின்னர், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு:
புதுவை மாநில உள்ளாட்சிகளில் நிலுவை சொத்து வரி, உரிமக் கட்டணம், நகராட்சிக் கட்டணம், கேபிள் டிவிக்கான கேளிக்கை வரி உள்ளிட்ட இனங்களில் நீண்ட காலமாக நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்படாமல் உள்ளன.
நிலுவை வரித் தொகை செலுத்தாதவர்கள் பட்டியலைத் தொகுத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 29) முதல் பட்டியல் வெளியிடப்படும்.
முதல் கட்டமாக ரூ. 15 கோடிக்கு மேல் நிலுவை வரி கட்டாதோர் பட்டியல் வெளியாகும்.
கேபிள் டிவிக்கான கேளிக்கை வரி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், அதுதொடர்பான வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வர்த்தக உரிமம் பெறுவதில் நிலுவையில் உள்ளோருக்கு தாமதமின்றி உரிமம் வழங்கும் பணி நடைபெறும்.
தற்போதுள்ள 15 ஆயிரம் கடைகளில் 3 ஆயிரம் கடைகள் மட்டுமே உரிமத்துடன் இயங்குகின்றன.
உரிமம் வழங்க சரியான தரவு தளத்தை உருவாக்குவதுடன், ஆன்லைனுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி வருவாயை மேம்படுத்த முக்கிய பங்குதாரர்களிடம் மாதாந்திர மதிப்பாய்வு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தனது கட்செவி அஞ்சலில் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.