Enable Javscript for better performance
இன்று சர்வதேச விண்கற்கள் தினம்: பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    இன்று சர்வதேச விண்கற்கள் தினம்: பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 30th June 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச விண்கற்கள் தினத்தையொட்டி, பள்ளிகள், கல்லூரிகளில் புதுவை அறிவியல் இயக்கத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
    புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில், சர்வதேச விண்கற்கள் தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஜூன் 30) புதுவையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக விண்கற்கள் தொடர்பாக அந்த இயக்கத்தினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
    கருவடிக்குப்பம் பண்டிதர் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்தாளராக புதுவை பாரதிதாசன் மகளிர் கலை - அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் மதிவாணன் பங்கேற்று விளக்கமளித்தார்.
    நிகழ்ச்சிக்கு அறிவியல் ஆசிரியர் மனோஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாலை அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்தாளராக அறிவியல் இயக்க உறுப்பினர் அருண்குமார் பங்கேற்று நழுவுப்படக் காட்சிகளுடன் விளக்கமளித்தார். 
    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் (நிலை 1) அச்சுதன், தலைமையாசிரியை (நிலை 2) மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர். சமுதாய நலப் பணித் திட்டம் சார்பில், ஆசிரியர் ராமலிங்கம் பங்கேற்று நோக்கவுரையாற்றினார்.
    அறிவியல் இயக்கம் சார்பில் அதன் செயலர் அருண் நாகலிங்கம், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
    நிகழ்ச்சியில் எரி கற்களின் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு குறும்படம் மூலம் விளக்கப்பட்டது. 
    விண்கல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விண்கல் பூமியைத் தாக்குவதால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து மக்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது குறித்து விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
    விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர் அருண் நாகலிங்கம் கூறியதாவது:
    வான் வெளியில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில், பூமியைத் தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.
    கடந்த 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் இனங்கள் முற்றிலும் அழியக் காரணமே மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் விழுந்த விண்கல் வெடிப்புதான்.
    சென்ற நூற்றாண்டில் 1908 ஜூன் 30, காலை 7 மணியளவில் ரஷிய நாட்டின் சைபீரியா பகுதியில், துங்குஸ்கா எனும் இடத்தில் 100 மீ. குறுக்களவு கொண்ட ஒரு விண்கல் தரையில் இருந்து, ஐந்து மீட்டர் உயரத்தில் வெடித்தது. அதனால் 2,150 சதுர கி.மீ. பரப்பில் இருந்த எட்டு கோடி மரங்கள் கருகின.
    அப்படியொரு விண்கல் மீண்டும் பூமியின் மீது மோதுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே நாம் பூமியின் தோற்றம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
    எனவே, அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச விண்கற்கள் தினம் சனிக்கிழமை (ஜூன் 30) புதுவையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவுள்ளது. அப்போது, விண்கற்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai