புதுவை ஆளுநர் பொய் பிரசாரம் செய்கிறார்
By DIN | Published on : 30th June 2018 09:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருவதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார்.
புதுவை பிரதேச பொருளாதாரம் - புள்ளி விவரத் துறை சார்பில், "நிர்வாக விவரங்களில் தர மேம்பாடு' என்ற கருத்தை மையமாகக் கொண்டு 12-ஆவது தேசிய புள்ளியியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்குத் தலைமை வகித்த பொதுப் பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
பொருளாதாரம் - புள்ளி விவரத் துறை புதுவை அரசுக்கும், மக்களுக்கும் தேவையான புள்ளி விவரங்களை அளித்து வருகிறது. இந்தத் துறையால் என்ன லாபம் என்று பலர் நினைக்கின்றனர். இது அரசின் முக்கியத் துறையாகும். அரசின் எந்த ஒரு செயலை அமல்படுத்தவும் அடிப்படையாக இருப்பது புள்ளி விவரங்கள்தான் என்றார் அவர்.
விழா முடிவில் அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆளுநரின் நடவடிக்கையால், கடந்த 5 நாள்களில் ரூ. 50 கோடி மின் நிலுவைத் தொகை வசூலானது குறித்து கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசு தொடர்ந்து மின் நிலுவைத் தொகையை வசூல் செய்து வருகிறது. ஆளுநர் தலையிட்டதால்தான் மின் நிலுவைத் தொகை வசூலானது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் அவர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார் அவர்.
விழாவில், புள்ளி விவரத் துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தத் துறையில் 141 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 90 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. எங்களுக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது. எனவே, விரைந்து காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என்றார் அவர்.
முன்னதாக, அரசு செயலர் மணிகண்டன் வாழ்த்துரையாற்றினார். இந்திரா காந்தி அரசுக் கலைக் கல்லூரி புள்ளியியல் துறைத் தலைவர் ஜாஸ்மின் கருத்துரையாற்றினார்.
நிகழ்ச்சியில் புள்ளியியல் துறை இணை இயக்குநர்கள் சுந்தரமூர்த்தி, சித்ரா, பார்த்தசாரதி, புள்ளி விவரத் துறை அதிகாரிகள், அலுவர்கள், இந்திரா காந்தி கலை - அறிவியல் கல்லூரி புள்ளியியல் துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.