Enable Javscript for better performance
மாங்கனித் திருவிழா கடைகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மாங்கனித் திருவிழா கடைகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 30th June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    காரைக்கால் மாங்கனித் திருவிழா கடைகளில் குப்பைகளைக் கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி பாரதியார் சாலையில் அம்மையார் கோயில் பகுதியில் இருபுறமும் நீண்ட பந்தல் அமைக்கப்பட்டு, திருவிழா கடைகள் வைக்கப்பட்டுள்ளன. கடைகளில் பொருள்கள் வாங்க காலை முதல் இரவு வரை ஏராளமானோர் அந்தப் பகுதிக்குச் செல்கின்றனர்.
    தினமும் அந்தப் பகுதியில் குப்பைகள் அதிகமாகக் குவிகிறது. குப்பை அகற்றும் பசுமை நண்பர்கள் குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர்.
    கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு வரும் மக்களிடையே குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காரைக்கால் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தினரும், பசுமைப் பயணப் பேரவையினரும் இணைந்து வியாழக்கிழமை மாலை தூய்மை குறித்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
    பசுமைப் பேரவைத் தலைவர் ராஜலட்சுமி, செயலர் கலாம் விக்னேஷ், மருத்துவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர், அமைப்பின் பிரதிநிதிகளுடன் கடைகளுக்குச் சென்று குப்பைகள் கையாளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
    மக்கும் குப்பை, மக்காத குப்பையை கடையிலேயே தரம் பிரித்து வைக்குமாறும், இரவு கடையில் வியாபாரம் முடியும் நேரத்தில் குப்பைகளை பையில் சேகரித்து வாயில் பகுதியில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அந்தப் பகுதிக்கு வந்த மக்களிடமும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அமைப்பினர் வழங்கினர். திருவிழா கடைகள் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், இதுபோன்ற விழிப்புணர்வுப் பணி தொடர்ந்து மக்களிடையே மேற்கொள்ளப்படும் என அமைப்பினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai