மின் கட்டணம், வரி நிலுவை வைத்திருப்போர் சொத்துகள் ஏலம்: ஆளுநர் உத்தரவு
By DIN | Published on : 30th June 2018 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மின் கட்டணம், உள்ளாட்சிகளில் பல்வேறு வரி நிலுவைத் தொகை செலுத்தாதவர்களின் சொத்துகளை ஏலம்விட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவையில் மின் கட்டணம், உள்ளாட்சிகளில் வரி நிலுவைத் தொகைகளை வசூல் செய்வது தொடர்பாக துறைச் செயலர்களுடன் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவின் விவரம்:
புதுவையில் நீண்ட காலமாக மின் கட்டணம், வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் சொத்துகளைச் சட்டப்பூர்வமாக அடையாளப்படுத்தி, வழங்கப்பட்ட கால அளவுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் ஏலம் விடலாம். சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்று அந்தச் சொத்துகளை அரசே ஏற்கும் நடவடிக்கையையும் எடுக்கலாம். கட்டணம், வரி செலுத்தாமல் அதிகளவில் நிலுவை வைத்திருப்பவர்களின் சொத்துக்கு முன்பாக அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். கட்டண நிலுவை வைத்திருப்போரின் பெயருடன், புகைப்படத்தையும் இனி வெளியிட வேண்டும். நீதிமன்ற வழக்குகள் தொடர்பாகவும், எத்தனை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மாதந்தோறும் வணிக வரித் துறை ஆணையர், சட்டத் துறைச் செயலரை சந்தித்து கேட்டறிய வேண்டும். அதேபோல, எவ்வளவு
நிலுவைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிதித் துறைச் செயலர் தெரிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மாதாந்திரக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும். அடுத்த கூட்டம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும். வெளிச் சந்தையில் ரூ. 1,075 கோடியை புதுவை அரசு கடனாகப் பெற்றுள்ளது. இந்தத் தொகையில் ரூ. 350 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சரியான நேரத்தில் தங்களுக்கு உரிய கட்டணம், வரிகளை செலுத்த வேண்டும். நிலுவைக் கட்டணத் தொகையைச் சரியான முறையில் வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் வெளிச் சந்தையில் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும் என ஆளுநர் வெளியிட்ட கட்செவி அஞ்சல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.