Enable Javscript for better performance
புதுவை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நியமன எம்.எல்.ஏ. சாமி- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன்

    By DIN  |   Published on : 24th March 2018 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியமனஎம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காவிடில், புதுவை முதல்வரும், சட்டப்பேரவைத் தலைவரும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாநில பாஜக தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான வி.சாமிநாதன் எச்சரித்தார்.
    புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
    மத்திய அரசு புதுவை யூனியன் பிரதேச சட்டத்தின்படி, உள்துறை அமைச்சகம் மூலம் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவரும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு அதற்கு ஒப்புதல் அளித்தார்.
    நியமன எம்.எல்.ஏ.க்களான நாங்கள் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்த போது, உள்துறை அமைச்சக உத்தரவில் பெயர்கள் மட்டுமே உள்ளன; முழு முகவரி இல்லை என்று கூறினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரியுடன் முழு விவரத்தையும் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினோம். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மதிக்காமல் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் மூலமாக எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
    இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி பலமுறை கூறியுள்ளார். அதன்படி, எங்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தனது எல்லையை மீறிச் செயல்படுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    சட்டப்பேரவைக்குள் எங்களை வரக் கூடாது என்று கூறும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு இல்லை. எனவே, வருகிற 26-ஆம் தேதி சட்டப்பேரவைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை என்றால், முதல்வரும், பேரவைத் தலைவரும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சட்டப்பேரவைக்குள் எங்களை நுழைய விடாமல் இடையூறு செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நாங்கள் நேரிடையாகவே சட்டப்பேரவையில் சென்று அமரலாம்.
    புதுவை காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல பாதுகாப்புக் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுத உள்ளோம். இனி, பேரவைத் தலைவரைச் சந்தித்து எங்களுக்கு இடமும், சலுகைகளும் வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிக்க மாட்டோம்.
    உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை ஆணை பிறப்பிக்க வாய்ப்பு இல்லை என்றார் வி.சாமிநாதன். பேட்டியின் போது, நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கர், மாநில பாஜக துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், இந்து முன்னணி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai