Enable Javscript for better performance
காவிரி: மத்திய அரசின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது: சுப.உதயகுமாரன்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: மத்திய அரசின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது: சுப.உதயகுமாரன்

    By DIN  |   Published on : 31st March 2018 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாத்தில் மத்திய அரசின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமாரன் கூறினார்.
    புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுப.உதயகுமாரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    மத்திய அரசும்,  பிரதமர் நரேந்திர மோடியும் உச்ச நீதிமன்றத்தை அவமதித்தும்,  அரசியல் சாசனத்தை மீறியும் தமிழகத்தை வஞ்சித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிகத் தெளிவாக காலவரையறை வகுத்து தீர்ப்பளித்த பின்னரும், கடைசி நேரம் வரை காத்திருந்து திட்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று 8 கோடி தமிழர்களை வஞ்சித்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
    இந்திய தேசியம் பேசுகிறவர்கள்,  நாட்டைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், தங்களை தேச பக்தர்கள் என்று வர்ணிப்பவர்கள் தேசியத்தின் அடிப்படை ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக நடந்துள்ளனர். தமிழர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது. அரசியல் சாசனத்தை மீறி,  உச்ச நீதிமன்றத்தை அவமதித்து,  8 கோடி தமிழர்களை மிக மோசமாக வஞ்சித்த இந்த நடைமுறையை எப்படி வர்ணிப்பது?
    மத்திய அரசின் செயல் இந்திய தேசிய ஒற்றுமைக்கும்,  இறையாண்மைக்கும் எதிரானது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், அந்த மக்களை கடுகளவும் மதிக்காமல் ஆலையை விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்களது நிலைபாடு. கூடங்குளம்,  ஸ்டெர்லைட்,  நியூட்ரினோ ஆகிய திட்டங்கள் வேண்டாம் என்று மக்கள் போராடுகின்றனர். ஆனால், மத்திய அரசோ மக்களை மதிக்காமல் அந்தத் திட்டங்களை விரிவாக்க அனுமதி வழங்குகிறது. 
    அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், பெரு முதலாளிகளுக்காவும் சிந்திக்காமல் நாட்டு மக்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன்,  ஐந்தாவது தூண் மாநில அமைப்பாளர் கோ.சக்திவேல்,  பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு.தமிழ்மணி,    மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் கோ.அ.ஜெகன்நாதன்,  மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் உள்ளிட்டோர் 
    பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai