Enable Javscript for better performance
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் ரங்கசாமியின் கனவு பலிக்காது: முதல்வர்- Dinamani

சுடச்சுட

  

  குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் ரங்கசாமியின் கனவு பலிக்காது: முதல்வர்

  By DIN  |   Published on : 31st March 2018 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
  புதுவை சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
  புதுவை அரசியல் நிலவரம், அரசின் செயல்பாடுகள் தொடர்பாக  வியாழக்கிழமை காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து விளக்கமாகக் கூறியுள்ளோம். அப்போது, அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன்,  புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 
  நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சித் தலைமை சொல்லும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக மாநில முதல்வர் எவ்வாறு அந்த மாநில விவசாயிகளின் நலனுக்காகப் பேசுகிறாரோ, அதுபோல நானும் புதுவை மாநில விவசாயிகளின் நலனுக்காகப் பேசி வருகிறேன்.
  எதிர்கட்சிப் பணியை என்.ஆர்.காங்கிரஸ் சிறப்பாகச் செய்வதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத் தொடங்கியதும் வந்து இந்த அரசில் எந்தப் பணியும் நடக்கவில்லை எனக் கூறிவிட்டு 5 நிமிடங்களில் வெளிநடப்பு செய்வதையே இரு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது.
  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தில்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்ததை நான் விமர்சனம் செய்யவில்லை. சட்டப்
  பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தின் போது கூட என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இல்லை. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
  என்.ஆர்.காங்கிரஸுக்கு காரைக்கால் விவசாயிகள் மீது துளியும் அக்கறை இல்லை. அவர்களுக்கு பதவியும்,  நாற்காலியும்தான் முக்கியம். அதைத் தவிர வேறு எந்தத் திட்டமும் அவர்களுக்கு இல்லை.
  காவிரி விவகாரத்தில் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு நீதிமன்றத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பது, மக்களைத் திரட்டி  அழுத்தம் கொடுப்பது என இரு வழிகள் உள்ளன.
  புதுவை அரசை முடக்குவது பற்றி எனக்குத் தெரியாது. 
  பத்திரிகை செய்திகளுக்கும்,  ஆளுநரின் அறிக்கைகளுக்கும் நான் பதில் சொல்வதில்லை. மக்களவையில் நடக்கும் அமளிக்குப் பதிலாக, மத்திய அரசை எதிர்த்து அவசரநிலை (எமர்ஜென்சி) கொண்டு வரலாம்.
  சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும். அது தவறு என்றால், நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். பேரவைத் தலைவரை வழக்கிலேயே சேர்க்காமல் போடப்பட்ட நீதிமன்ற உத்தரவு எப்படி பேரவைத் தலைவரை கட்டுப்படுத்தும்?  யார் பேரில் வழக்குத் தொடுக்கிறார்களோ,  அவர்களை பிரதிவாதியாகச் சேர்க்க வேண்டும். இதுதான் சட்டத்தின் அடிப்படை தத்துவமாகும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai