Enable Javscript for better performance
புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி- Dinamani

சுடச்சுட

    

    பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அழைப்பின் பேரில், தில்லிக்குச் சென்ற என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை புதுச்சேரி திரும்பினார்.
    புதுவை மாநிலத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்ந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன்,  திமுக பிரமுகர் தனலட்சுமி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வருகிறது.
    இதற்கிடையே, நியமன எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் வர தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ரகசிய அறிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். 
    இந்த நிலையில்,  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் அவசர அழைப்பின் பேரில், வியாழக்கிழமை அதிகாலை புதுவை எதிர்கட்சித் தலைவரும்,  என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
     தில்லியில் அமித் ஷாவை சந்தித்து ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைக்குள் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வர என்.ஆர்.காங்கிரஸ் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.  ஆட்சி மாற்றத்துக்கு முயற்சி செய்தால் மாற்றுக் கட்சிகளில் இருந்து எத்தனை எம்.எல்.ஏ.க்களை அழைத்து வர முடியும் என்றும்,  வாரியத் தலைவர்கள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்தும் ரங்கசாமியிடம்,  அமித் ஷா பேசியதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கலாம் என்று பாஜக நிர்வாகிகள் ரங்கசாமியிடம் தெரிவித்தனர்.
    ஆனால்,  உடனடியாக ஆட்சி மாற்றம் செய்ய பாஜக தலைமை பிடி கொடுத்துப் பேசவில்லை என்பதால், அதிருப்தியடைந்த ரங்கசாமி தில்லியில் காத்திருக்காமல் உடனடியாக புதுச்சேரிக்கு திரும்பிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai