Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி 22-இல் மறியல்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி 22-இல் மறியல்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி, புதுவை அரசின் தலைமைச் செயலகம் முன் வருகிற 22-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
     இது குறித்து, அந்தக் கட்சியின் புதுவை பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்குக் காரணம் பொதுமக்கள் முன் வைக்கும் பிரச்னைகளில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாததுதான்.
     சில அரசியல் பிரமுகர்கள் போலியாக ஏடிஎம் அட்டைகளை தயாரித்து பல கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை.
     எனவே, அரசியல் தலையீடு இல்லாமல் வழக்கில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.
     புதுவையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிதாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும்.
     தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.
     சாசன் நிறுவனம் சட்டத்தை மீறி பல லட்சம் லிட்டர் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருகிறது. தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நடைபெற்ற தடியடி குறித்து உயர் மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
     மாநிலத்தின் நீர் வளத்தை பாதுகாக்க பொருத்தமான நீராதார கொள்கை உருவாக்குவதோடு, அதிக நீரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை என்ற கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 8 வார காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கடந்த வாரம் உத்தரவிட்டது. எனவே, உடனடியாக தேர்தல் ஆணையரை நியமித்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
     காங்கிரஸ் அரசு தங்களிடம் உள்ள அதிகாரம் போய்விடக்கூடாது என எப்படி போராடுகிறதோ, அதுபோல, உள்ளாட்சித் தேர்தலை நடத்தி கடைசி கட்ட மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 22-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்
     ராஜாங்கம்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai