Enable Javscript for better performance
முதல்வருடன் கருத்துவேறுபாடு இல்லை: அமைச்சர் கந்தசாமி- Dinamani

சுடச்சுட

    

    முதல்வருடன் கருத்துவேறுபாடு இல்லை: அமைச்சர் கந்தசாமி

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களுக்காகவே புதுவை ஆளுநரை அடிக்கடி சந்திக்கிறேன், முதல்வருடன் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
     புதுச்சேரி கடற்கரையில் மணல் பரப்பை மீட்டெடுக்கும் வகையில் புதுவை அரசு, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
     இந்த நிலையில் அப்பகுதியில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சமூக நலம் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் கந்தசாமி செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டு வரும் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
     ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
     புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி கால தாமதம் ஏற்பட்டு வருவதாலும், இதனால் மீனவர்கள் பாதிக்கும் நிலை உருவாகும் எனக் கூறப்படுவதாலும் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டேன். துறைமுக முகத்துவாரத்தில் ஆழப்படுத்தும்போது கிடைக்கும் மணல் இங்கு வந்து கொட்டப்படுவதாக இருந்தது. துறைமுகம் ஆழப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் இப்பணியும் தாமதம் ஏற்பட்டது.
     தற்போது, அதிகாரிகள் 2 மாதத்தில் முடித்துவிடுவதாக உறுதியளித்துள்ளனர். மீனவ மக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சாசன் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சுற்றுச்சூழல் துறைக்கு எந்தக் கோப்பும் வரவில்லை. கோப்பு வந்தால் மக்கள் நலனுக்கு ஏற்ற வகையில்தான் முடிவு எடுக்கப்படும்.
     மத்திய அரசின் உத்தரவுப்படிதான் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களை பாதிக்கச் செய்யும் வகையில் அனுமதி தர மாட்டோம்.
     பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்றுப்பொருள்: புதுச்சேரியில் 2 மாத காலத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்படும். மாற்றுப்பொருள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
     அமைச்சர்களுக்கு ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது, சுமுக உறவு இருந்தால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என ஊடகங்களும் பொது மக்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில்தான் ஆளுநரை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத் திட்டங்களுக்கு கையொப்பம் பெற்று வருகிறேன்.
     இந்த விஷயத்தில் எனக்கும், முதல்வருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. கருத்து வேறுபாடு வராது.
     எனக்கும், ஆளுநருக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை.
     ஆளுநரை சந்தித்து வருவதால் பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆளுநரின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால்தான் அவரை அடிக்கடி சந்தித்து வருகிறேன். மக்களுக்காக ஆளுநருடன் சண்டை போடாமல் நெருக்கமாக உள்ளேன் என்றார் அவர். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, துறைமுகத் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai