Enable Javscript for better performance
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: அதிகாரிகளிடம் தமிழக, புதுவை எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: அதிகாரிகளிடம் தமிழக, புதுவை எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் சென்டாக் சார்பில் வியாழக்கிழமை முதுநிலை மருத்துவப் படிப்பில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கும்போது தமிழக, புதுவை எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     புதுவையில் உள்ள 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடான 84 இடங்கள், நிர்வாக ஒதுக்கீடான 81 இடங்கள் என மொத்தம் 165 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
     அதன்படி, 2018-19-ஆம் கல்வி ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஏற்கெனவே நிறைவுபெற்றது.
     இதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 2 கட்ட கலந்தாய்வு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டது.
     முன்னதாக, புதுவை அரசு சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு நிரம்பாமல் இருந்தால், அதனை மேலாண்மை இடங்களாக மாற்றி அவ்விடங்களில் புதுச்சேரியை பூர்விகமாகக் கொண்ட மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது.
     இதை எதிர்த்து 2 சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளன.
     இந்த நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வின் முடிவில், சிறுபான்மை கல்லூரிகளில் காலியாக இருந்த 67 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
     இந்த இடங்களை நிரப்புவதற்கான இறுதிகட்ட மாப்-அப் கலந்தாய்வு சென்டாக் அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கியது. இதற்கு புதுவை அதிமுக பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கலந்தாய்வை நிறுத்த வேண்டும். புதுவை மாணவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த ஆளுநரிடம் இருந்து ஆணை பெற்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
     அதன்பின்னர் அங்கு வந்த தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, எதற்காக கலந்தாய்வை நிறுத்தி வைத்துள்ளீர்கள்?. திடீரென கலந்தாய்வை நிறுத்த உத்தரவு ஏதாவது வந்ததா? இல்லையென்றால் அறிவித்தபடி கலந்தாய்வை நடத்துங்கள் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
     இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காலதாமதமாக கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன. இதனால், புதுச்சேரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
     வியாழக்கிழமை நடந்த கலந்தாய்வு முடிவில் 43 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் மருத்துவம் சாராத முதுநிலை படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் 24 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் 21 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை கல்லூரி நிர்வாகங்களே நிரப்பும்.
     இதுகுறித்து புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர்கள் சங்கத் தலைவர் ராஜ்பவன் வை.பாலா கூறியதாவது:
     இதுவரை நடந்த கலந்தாய்வில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். இதன் பிரதியை புதுவை பல்கலைக்கழகத்துக்கும், அகில இந்திய மருத்துவக் கழகத்துக்கும் சென்டாக் நிறுவனம் அனுப்பிவைக்க வேண்டும். மேலும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேரளம், கர்நாடகம் போல உயர் கல்விக் கட்டண கண்காணிப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றார் பாலா.
    அகில இந்திய ஒதுக்கீட்டின்படி நிரப்பியது ஏன்? சுகாதாரத் துறை விளக்கம்
     இதுகுறித்து, புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
     புதுவை அரசு ஆணைப்படி பிம்ஸ் (மத வழி சிறுபான்மையினர் - கிறிஸ்தவர்கள்) மற்றும் வெங்கடேஸ்வரா (மொழிவழி சிறுபான்மையினர்) ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு நிரப்பப்படாமல் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் மேலாண்மை இடங்களாக மாற்றி அந்த இடங்களை நீட் முதுநிலைத் தேர்வு 2018-ல் தேர்ச்சி பெற்ற புதுவை மாநிலத்தை குடியுரிமையாகக் கொண்ட மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
     அவ்வாறு நிரப்பப்பட்டு மீதம் உள்ள காலி இடங்களை அகில இந்திய அளவில் நிரப்ப வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.
     மேலே, குறிப்பிட்ட 2 மருத்துவக் கல்லூரிகளும் இந்த அரசாணையை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசாணையின்படி புதுவை மாநிலத்தை குடியுரிமையாகக் கொண்ட மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டதால் அதற்கு தற்காலிக தடை பிறப்பித்தது.
     புதுவை அரசு பல கட்ட முயற்சி செய்தும், உயர் நீதிமன்றம் அரசாணைக்கு வழங்கிய இடைக்கால தடையை திரும்பப் பெற இயலவில்லை.
     ஆனால், இந்திய மருத்துவக்கழகம், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி கலந்தாய்வை மே 18-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இச்சூழலில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை மே 18-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கழகத்தின் ஆணையையும் கருத்தில் கொண்டு, மேலாண்மை இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வை (மாப்-ஆப் கலந்தாய்வு) சென்டாக், அகில இந்திய நீட் தகுதி அடிப்படையில் நிரப்பியது.
     மேலும், உச்ச நீதிமன்றம், டாக்டர் கீர்த்தி லக்கீனா மற்றும் கர்நாடக அரசிற்கு எதிரான வழக்கில் கர்நாடகத்தை குடியுரிமையாகக் கொண்ட மாணவர்களை கொண்டு மட்டுமே முதுநிலை மருத்துவ இடங்களை கலந்தாய்வின்படி நிரப்ப வேண்டும் என்ற முடிவை நிராகரித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai