Enable Javscript for better performance
வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி; தந்தை- மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி; தந்தை- மகன் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 18th May 2018 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     புதுச்சேரி முதலியார்பேட்டை தமிழ்த்தாய் நகரைச் சேர்ந்தவர் முருகன்(43). இவர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். முருகன் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த காபிரியேல் மூலம் 2016-ம் ஆண்டில் ரூ.19 லட்சத்தை வேல்ராம்பேட்டை இன்ஜினீயர்ஸ் காலனியைச் சேர்ந்த தணிக்கையாளர் ரவிச்சந்திரன் (50) மற்றும் விழுப்புரம் மாவட்டம், அம்மனங்குப்பத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் (50) ஆகியோரிடம் தொழில் நிமித்தமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
     ஆனால், பணத்தை உரிய காலத்தில் அவர்கள் திருப்பி கொடுக்காததால் காபிரியேலிடம் முருகன் முறையிட்டார். இச்சம்பவம் குறித்து காபிரியேல், ரவிச்சந்திரனிடம் கேட்கவே, அவர்கள் கடத்தல் நாடகம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு முருகன் தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
     அதைத் தொடர்ந்து காவல்துறை உயர்அதிகாரிகள் வேல்ராம்பேட்டில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 1.7.2016-ல் இந்த பணமோசடி தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் ரவிச்சந்திரன், தர்மலிங்கம் மீது மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
     இருப்பினும் தர்மலிங்கம் ஒன்றரை ஆண்டாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இதனிடையே கடந்த மாதம் மயிலம் பகுதியில் தங்கப் புதையல் வழக்கில் தர்மலிங்கம் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
     இதுகுறித்த தகவல் கிடைத்த நிலையில், முதலியார்பேட்டை போலீஸார் கடந்த வாரம் அவரை கடலூர் சிறை சென்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
     அப்போது இந்த மோசடியில் தனது வளர்ப்பு மகன் வெங்கடேசன் மற்றும் உறவினர்களுக்கும் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
     இதையடுத்து அவரை புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்த முதலியார்பேட்டை போலீஸார் வியாழக்கிழமை அவரது மகன் வெங்கடேசனை பாரதி மில் அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர்.
     அவரிடம் இருந்து செல்லிடப்பேசி மற்றும் தங்க நாணையங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தர்மலிங்கம் மனைவி ரேணுகா உள்ளிட்ட 4 பேரை தனிப்படை தேடி வருகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai