ஆண்கள் மீது ஆதாரமின்றி பாலியல் குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

ஆதாரமின்றி ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறக் கூடாது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை

ஆதாரமின்றி ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறக் கூடாது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த அவர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  முதலில் தன் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாதவராக இருக்க வேண்டும்.  தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே, மு.க. ஸ்டாலின் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.
 தற்போது தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் பாஜக பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  நல்லதோ,  கெட்டதோ எதுவாக இருந்தாலும்,  பாஜக பெயரை சொல்லியாக வேண்டிய அளவுக்கு அச்சமடைந்துள்ளன.
நாட்டில் பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பணி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆண்களுடன் பெண்கள் பழக வேண்டிய நிலை வருகிறது.  இந்த மாதிரியான சூழலில் ஆதாரமில்லாமல் ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறுவது நாட்டின் தன்மையை கெடுக்கும்.  ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அது அவருக்கு தண்டனை பெற்றுத்தரும் குற்றச்சாட்டாக இருக்க வேண்டும்.  அதேநேரத்தில், குற்றம்சாட்டப்பட்டவரின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்றார்.
ஐயப்பனை வழிபடக் கூடிய முறை, விரதங்கள் குறித்து பெண்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், ஐயப்பனை வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை வலிய பிடித்து சபரிமலைக்கு இழுத்துச் சென்றால் கூட அவர்கள் வரமாட்டார்கள். இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் கேரள அரசு எது வேண்டுமானாலும் செய்யும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பேட்டியின்போது பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ.,  நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கர்,  மாநில துணைத் தலைவர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com