ஆளுநர் தலைமையில் பாகூர் ஏரிக்கரையில் பனை விதை நடவு

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் பாகூர் ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் பாகூர் ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வார விடுமுறை நாள்களில் கள ஆய்வு செய்து வருகிறார்.  அண்மைக்காலமாக "நீர்வளமிக்க புதுச்சேரி' எனும் இலக்குடன் இந்த கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.  தனது 198-ஆவது கள ஆய்வாக மங்கலம் தொகுதிக்குள்பட்ட உறுவையாறு கிராமத்தில் குடுவையாற்றை தூர்வாரும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைத்தார். இந்தப் பணிக்கு தொகுதி எம்.எல்.ஏ.  சுகுமாறன் முன்னிலை வகித்தார். 
பின்னர், ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தென்பெண்ணை ஆற்றின் முக்கியமான 5 பிரதான கிளை ஆறுகளில் குடுவையாறும் ஒன்று.  18 கி.மீ.  ஓடும் இந்த  ஆறு,  7 கி.மீ. தமிழகத்திலும்,  11 கி.மீ. புதுவையிலும் ஓடுகிறது.  இந்த ஆறு,  சிவரந்தாகம்,  மேல்சாந்தமங்கலம்,  கொற்காடு,  ஏம்பல வாணன் ஏரி,  ஏம்பலம் சித்தாறு,  திருக்காஞ்சி,  கீழ் அக்ரஹாரம் ஆகிய  9 குளங்களுக்கு நீர் வழங்குகிறது.  
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் உடுவையாறு ஆற்றில் 2.75 கி.மீ. தொலைவுக்கு ரூ.6.71 லட்சத்தில் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 12 கிராமங்கள் பயன்பெறும்.  மேலும், குடுவையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழுர், சிவரண்டாகம்,  மங்கலம்,  கொற்காடு,  உறுவையாறு,  திருக்காஞ்சி,  கீழ்அக்ரஹாரம் ஆகிய 7 தடுப்பணைகளும் பயன்பெறும். இதன் மூலம் 1,355 ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். 
மழைக்காலம் தொடங்க உள்ளதால் மழைநீர்  வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.  மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு  செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆளுநர் கிரண் பேடி. அதைத் தொடர்ந்து, பாகூர் ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்யும் பணி ஆளுநர் கிரண் பேடி தலைமையில் நடைபெற்றது.  
மொத்தம் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்போது பொதுப்
பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம்,  கண்காணிப்புப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி,  கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com