புதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக ஆதரவு அளிக்கவில்லை.
 அதன் காரணமாக தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. காரைக்காலில் இருந்து புதுச்சேரி வந்த தமிழக அரசுப் பேருந்தை நெல்லித்தோப்பில் சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது.
 அப்போது பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். போலீஸார் கல்வீசியவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
 இதேபோல, முத்தியால்பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து சேதமடைந்தது. இதனால், தமிழக பேருந்துகள் புதுச்சேரி எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும், புதுச்சேரி வழியாக சென்னை செல்ல வேண்டிய பேருந்துகள் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில் 25- க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையம் வந்தனர்.
 அப்போது, சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த தமிழக அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 இதையடுத்து, சென்னைக்கு அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் ரகுமான் தலைமையில் 20- க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் புதுச்சேரி பேருந்து நிலைய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது, புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை அவர்கள் மறித்தனர். போலீஸார் மாணவர் பேருந்தை அனுமதிக்க கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ரகுமான் தரப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
 முத்தியால்பேட்டை சரவணன் தலைமையில் 40- க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 சிறிது நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரமேஷ் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்து பேருந்து நிலைய வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
 மகிளா காங்கிரஸ் தலைவி ஹேமலதா தலைமையில் மகிளா காங்கிரஸாரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 ஆளுநர் மாளிகை அருகே வழக்குரைஞர் வேலு தலைமையில் 35 பேர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com