ஐ.சி.எஸ்.ஐ - புதுவை பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தோடு (ஐ.சி.எஸ்.ஐ.) புதுவை மத்திய பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தோடு (ஐ.சி.எஸ்.ஐ.) புதுவை மத்திய பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 புதுவை பல்கலை.யின் அங்கீகாரம் பெற்று, புதுவையில் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் வணிகத் துறை மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு,  புதுவை பல்கலைக்கழகம், புதுதில்லியில் இயங்கும்  
ஐ .சி. எஸ்.ஐ. நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டது. இதன்மூலம், வணிகவியல் (பி .காம்) பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு இந்திய நிறுவனச் செயலர்களுக்கான நிறுவனம் சார்பில் 10 கிராம் தங்கப் பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பிக்கப்படும். 
அதோடு,  பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, இந்திய பட்டய செயலாளர்கள்  நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய கல்வி பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படும்.
முன்னதாக,  இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாகக் குழு வளாகத்தில் துணைவேந்தர் குர்மீத்சிங் முன்னிலையில் நடைபெற்றது. 
அப்போது பேசிய துணைவேந்தர் குர்மீத் சிங்,  பல்வேறு நவீனமயமான பன்னாட்டு வர்த்தகங்கள் இந்தியாவில் பெருகி வருகின்றன.  
பட்டயக் கணக்குப் படிப்பு முடித்த இளைஞர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
இந்த நிலையில், வணிகவியல் பாடத்தில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவர்கள் கெளரவிக்கப்படும்போது, இயல்பாகவே பட்டயக் கணக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாக வாய்ப்புண்டு.  வணிகவியல் துறை மாணவர்களை ஊக்குவிப்பதன் வாயிலாக, வளர்ந்து வரும் சூழலில், இந்தியாவுக்குத் தேவையான தரமான, தகுதியான தணிக்கையாளர்களையும் உருவாக்க முடியும். 
அதோடு,  கல்லூரிகளில் வணிகவியல் பயிலும்  மாணவர்களும்,  இதுபோன்ற நிறுவனங்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக கல்லூரித் தேர்வுகளில் மிகுந்த அக்கறையோடும்,  பொறுப்புணர்வோடும்,  பாடங்களில் தோல்வியடையாமலும் படிக்க முடியும் என்றார் அவர்.
முன்னதாக, தேர்வுக் கட்டுப்பட்டு ஆணையர் (பொ)  சித்ரா ஒப்பந்தத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் புதுதில்லி,  இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டலக் குழு  இணைச் செயலாளர் சாரா ஆரோக்கியசாமி,  துணை இயக்குநர் சித்ரா அனந்தராமன்,  பல்கலைக்கழக பதிவாளர்  சசிகாந்த தாஸ்,  நிதி அதிகாரி பிரகாஷ்,  தேர்வுக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், அனைத்துத் துறைச் சார்ந்த புலமுதன்மையர்கள்,  துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. வணிகவியல் துறை பேராசிரியர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com